போனஸ் வழங்கப்பட்டு விட்டதால் டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள் போட்டிபோட்டு மதுபானங்களை வாங்கினர்


போனஸ் வழங்கப்பட்டு விட்டதால் டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள் போட்டிபோட்டு மதுபானங்களை வாங்கினர்
x
தினத்தந்தி 4 Nov 2018 11:15 PM GMT (Updated: 2018-11-05T05:28:49+05:30)

தொழில் நிறுவனங்களில் போனஸ் தொகை வழங்கப்பட்டு விட்டதால் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் அதிக அளவு குவிந்தனர். மேலும் போட்டிபோட்டு மதுபானங்களை வாங்கினார்கள்.

திருப்பூர், 

திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினத்தில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் போனஸ் தொகையை பெற்று கொண்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

இதனால் பஸ்நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. சொந்த ஊர்களுக்கு செல்லாத தொழிலாளர்களும், திருப்பூரை சொந்த ஊராக கொண்டவர்களும் நேற்றில் இருந்தே பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வாங்கி உறவினர், நண்பர்களுக்கு வழங்கியும் வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மதுப்பிரியர்களும் தங்கள் பங்கிற்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட தொடங்கி விட்டனர். நேற்றும் பெரும்பாலான நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு போனஸ் தொகை வழங்கப்பட்டது.

இதனால் சில மதுப்பிரியர்கள் குறிப்பிட்ட தொகையை குடும்ப செலவிற்கு ஒதுக்கி விட்டு மீதமுள்ள தொகையை மது அருந்துவதற்கே செலவிடுகின்றனர். பல மதுப்பிரியர்கள் போனஸ் தொகை அனைத்தையும் மது அருந்துவதற்கு செலவிட்டு வருகின்றனர். இதனால் நேற்று திருப்பூர் சக்தி தியேட்டர் ரோடு, புதிய பஸ்நிலையம் அருகே, தாராபுரம் ரோடு, காலேஜ் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடை திறப்பதற்கு முன்னதாகவே காலையில் இருந்தே, அங்கு காத்திருந்து மதுவகைகளை வாங்கி சென்றனர். இரவு நேரத்திலும் போட்டி போட்டுக்கொண்டு மதுவகைகளை வாங்கி சென்றனர். டாஸ்மாக் கடையுடன் இணைந்து உள்ள பார்களிலும் வழக்கத்திற்கு அதிகமாகவே கூட்டம் இருந்தது. சில கடைகளின் முன்பு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. போலீசார் அந்த பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்கள். மதுப்பிரியர்கள் தீபாவளி பண்டிகையை 2 நாட்களுக்கு முன்னதாகவே கொண்டாட தொடங்கி விட்டனர் என்றே கூறலாம்.

Next Story