வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கூடுதல் தண்ணீர் - அமைச்சர் மணிகண்டன் தகவல்


வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கூடுதல் தண்ணீர் - அமைச்சர் மணிகண்டன் தகவல்
x
தினத்தந்தி 6 Nov 2018 3:45 AM IST (Updated: 5 Nov 2018 11:48 PM IST)
t-max-icont-min-icon

வைகை அணையில் இருந்து ராமநாதபுரத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வைகை அணையில் இருந்து கடந்த செப்டம்பர் 10-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. பிறகு பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாயை வந்தடைந்தது.

இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, போகலூர், நயினார்கோவில் மற்றும் ராமநாதபுரம் ஆகிய யூனியன்களுக்கு உட்பட்ட வைகை ஆற்று பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாய பணிகள் தொடங்கின. பருவமழையும் தொடர்ந்து பெய்ததால் கண்மாயில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

தற்போது வைகை அணையில் 69 அடிக்குமேல் தண்ணீர் நிரம்பி உள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் முழு கொள்ளளவான 71 அடியை விரைவில் எட்டி விடும் நிலை உள்ளது. இதைத்தொடர்ந்து தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 2 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுஉள்ளது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல கண்மாய்கள் மற்றும் ஊருணிகள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. வைகை அணையில் மேலும் தண்ணீர் திறக்கப்பட்டால் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய 2-வது ஏரியான ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய், சக்கரக்கோட்டை கண்மாய் போன்றவற்றை நிரப்ப முடியும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் எடுத்துக்கூறி வைகை அணையில் மீண்டும் தண்ணீர் திறக்க வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீரை விடுவிக்க முதல்-அமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார். விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இந்த தகவலை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக வைகை அணையில் இருந்து ராமநாதபுரத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது ஒரே ஆண்டில் 2-வது முறையாக வைகையில் இருந்து ராமநாதபுரத்துக்கு தண்ணீர் திறப்பது இப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Next Story