டெங்கு கொசு உற்பத்தி: கூட்டுறவு பண்டக சாலை கிடங்கிற்கு ரூ.25 ஆயிரம் அபராதம்


டெங்கு கொசு உற்பத்தி: கூட்டுறவு பண்டக சாலை கிடங்கிற்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 5 Nov 2018 10:15 PM GMT (Updated: 5 Nov 2018 7:02 PM GMT)

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருந்த கூட்டுறவு பண்டக சாலை கிடங்கிற்கு கலெக்டர் நிர்மல்ராஜ் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் சுற்றுப்புறம் தூய்மையாக உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்தார்.

திருவாரூர் மேல வடம்போக்கி தெரு, தென்றல் நகர், காகித காரத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் ஆய்வு நடந்தது.

மேல வடம்போக்கி தெருவில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை கிடங்கில் கலெக்டர் ஆய்வு நடத்தியபோது, அங்கு டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறம் அசுத்தமாக காட்சி அளித்தது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர், கூட்டுறவு பண்டக சாலை கிடங்கிற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அதேபோல் நகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திலும் டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டு, ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கூறியதாவது:-

பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் பிளாஸ்டிக் குப்பைகளை தேங்க விடக்கூடாது. குடிநீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அரசு அதிகாரிகளும் தங்களுடைய அலுவலகங்களின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். இல்லை எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story