மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் தேர்வானவர்களுக்கு கலந்தாய்வு கூட்டம்
மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் தேர்வானவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் மத்திய அரசின் குடியிருப்புத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களுக்கான தேர்வு நடைபெற்றது. திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் இந்த திட்டத்தின் கீழ் 2011-ம் ஆண்டு சமூக பொருளாதார கணக்கெடுப்புப் பட்டியலில் இடம் பெற்று வீடு கட்டாதவர்கள் மற்றும் இத்திட்டத்தில் பயன்பெற்றவர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குனர் வடிவேல் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.
உதவி திட்ட அலுவலர்கள் தேவிகா, ராணி, செயற்பொறியாளர் பவுன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குனர் கூறியதாவது, 2011-ம் ஆண்டு சமூக கணக்கெடுப்பில் விடுபட்ட ஓட்டு வீடு, கூரை வீடு உள்ளவர்களையும், வீடு இல்லாதவர்களையும், இடம் இருந்தும் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களும் மத்திய அரசின் குடியிருப்புத்திட்டத்தில் வீடுகட்ட அடுத்த 5 ஆண்டுகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்ய ஏதுவாக தற்போது ஆவாஸ் பிளஸ் என்ற இணையதளத்தில் பெயர்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
எனவே தகுதி உள்ள பயனாளிகள் அந்தந்த ஊராட்சி செயலர்கள், ஊராட்சி தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பட்டா நகல் ஆகிவற்றுடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், 40 ஊராட்சிகளிலிருந்து 390 பேர் பயனடைந்தனர். இதில் உதவி பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்துகொண்டனர். தலைமை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story