மஞ்சூர் அருகே: காட்டுப்பன்றியை வேட்டையாடிய 5 பேர் கைது


மஞ்சூர் அருகே: காட்டுப்பன்றியை வேட்டையாடிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 6 Nov 2018 3:30 AM IST (Updated: 6 Nov 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

மஞ்சூர் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மஞ்சூர், 

மஞ்சூர் அருகே உள்ள மஞ்சக்கம்பை கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. உணவு மற்றும் குடிநீர் தேடி வரும் வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் மஞ்சக்கம்பை அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டுப்பன்றியை சிலர் வேட்டையாடி அதன் இறைச்சியை காரில் கடத்துவதாக குந்தா வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, குந்தா வனச்சரகர் சரவணன் தலைமையில் வனவர் குணசேகரன், வனக்காப்பாளர்கள் ராமச்சந்திரன், ஜெயகணேஷ் மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். இதற்கிடையே அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த காரில் காட்டுப்பன்றி இறைச்சி இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் அவர்கள் மஞ்சக்கம்பை பஜார் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 28), சதீஷ்குமார் (30), மீனாட்சி சுந்தரம் (31), ரமேஷ் (32), கருப்பசாமி (38) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, மாவட்ட வனக்காப்பாளர் சுமேஷ் சோமன் உத்தரவுப்படி காட்டுப்பன்றியை வேட்டையாடிய 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்து கூடலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் 5 பேரும் ஊட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story