கோவில் விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடனம்


கோவில் விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடனம்
x
தினத்தந்தி 5 Nov 2018 10:30 PM GMT (Updated: 5 Nov 2018 8:28 PM GMT)

கோவை அருகே கோவில் விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. ஆகியோர் நடனமாடினார்கள்.

கோவை,

கோவையை அடுத்த சரவணம்பட்டி எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கைக்கோலபாளையம் கிராமத்தில் பழமையான விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இதையடுத்து திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த விழா காலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து விநாயகருக்கு 3-ம் கால யாகபூஜை, 108 திரவிய அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து குன்றக்குடி ஆதினம் பொன்னம்பல அடிகளார் தலைமையில் தீர்த்த குடங்கள் கொண்டு வரப்பட்டு விமானம், மூலவர், பரிவார தேவதைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

கோவில் விழாவில் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மகேந்திரன் எம்.பி., வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது ஒயிலாட்டக் குழுவினரின் நடனம் நடைபெற்று கொண்டிருந்தது.

அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அமைச்சரிடம் நடனம் ஆடுமாறு வற்புறுத்தினார்கள். இதையடுத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. ஆகியோர் இசைக்கு ஏற்ப கைகளை அசைத்தபடி நடனம் ஆடினார்கள். அமைச்சரும், எம்.எல்.ஏ.வும் நடனமாடியதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

Next Story