பெங்களூரு மாநகரில் பொது இடங்களில் குப்பையை வீசினால் கிரிமினல் வழக்கு கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


பெங்களூரு மாநகரில் பொது இடங்களில் குப்பையை வீசினால் கிரிமினல் வழக்கு கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 6 Nov 2018 2:27 AM IST (Updated: 6 Nov 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் பொது இடங்களில் குப்பை வீசினால் கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பெங்களூரு,

பூங்கா நகரம் என அழைக்கப்படும் பெங்களூரு மாநகரம் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக குப்பை நகரமாக காட்சி அளிக்கிறது.

குப்பை பிரச்சினை

நகரின் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே குப்பை கழிவுகள் மலைபோல் குவிகிறது. இந்த குப்பை கழிவுகளை அகற்ற மாநகராட்சியும், அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் குப்பை பிரச்சினை இதுவரை தீர்ந்தபாடில்லை. இன்று வரை நகரின் பல பகுதிகளில் ஆங்காங்கே குப்பை கழிவுகள் குவியல், குவியலாக கிடப்பதை காண முடிகிறது. இந்த குப்பை கழிவுகள் முறைப்படி சரியாக அகற்றப்படாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார் கள்.

இதுஒருபுறம் இருக்க பொதுஇடங்களில் குப்பை கொட்டக் கூடாது என்று மாநகராட்சி உத்தரவிட்டும், சிலர் கண்ட இடங்களில் குப்பை கழிவுகளை வீசி செல்வதையும் காண முடிகிறது. இதனால் பெங்களூரு குப்பை நகரமாக மாறிவிடும் என்ற அவல நிலை உள்ளது.

பொதுநல மனு

இந்த நிலையில், பெங்களூருவில் குப்பைகள் தேங்கி இருப்பதாகவும், அவற்றை அகற்ற பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட கோரியும் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது நவம்பர் 5-ந் தேதிக்குள் (அதாவது நேற்று) நகரில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இந்த பொதுநல மனு கர்நாடக ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பெங்களூரு மாநகராட்சி சார்பில் வக்கீல் நஞ்சுண்டரெட்டி ஆஜராகி வாதிடுகையில், “பெங்களூருவில் பெரும்பாலான இடங்களில் தேங்கிய குப்பைகள் அகற்றப்பட்டுவிட்டன. தினமும் குப்பை கொட்டும் இடங்களை தூய்மைபடுத்தி, அங்கு கோலம் போடப்பட்டது. ஆயினும் பொதுமக்கள் அங்கு குப்பைகளை வீசி செல்கிறார்கள்“ என்றார்.

கிரிமினல் வழக்கு

அப்போது தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி கூறுகையில், “குப்பையை அகற்றி கோலம் போட்ட பிறகும் குப்பையை வீசுபவர்கள் யார்? ரோந்து போலீசார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். பொது இடத்தில் குப்பை வீசுபவர்கள் மீது நகராட்சி சட்டப்படி நகர போலீசார் கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்குகளில் உரிய தண்டனை பெற்று தர வேண்டும். அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும். குப்பை வீசுபவர்கள் என்ன நினைத்து கொண்டிருக்கிறார்கள்?. அவர்களுக்கு குறைந்தபட்சம் குடிமகன் என்ற பொறுப்புணர்வு கூட இல்லையா?“ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “பொது இடத்தில் குப்பைகளை வீசுபவர்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து பெங்களூரு மாநகராட்சி சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்“ என்று கூறினார்.

ஒத்திவைப்பு

அதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் பெங்களூரு மாநகராட்சி சார்பில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படு கிறது.

Next Story