தண்டி யாத்திரையை நினைவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் உற்சாக வரவேற்பு


தண்டி யாத்திரையை நினைவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 5 Nov 2018 10:30 PM GMT (Updated: 5 Nov 2018 9:50 PM GMT)

தண்டி யாத்திரையை நினைவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் மேற்கொள்ளும் குழுவினர் நாமக்கல் மாவட்டம் வந்தனர். இவர்களுக்கு குமாரபாளையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாமக்கல்,

மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையிலும், உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நிகழ்வினை நினைவுபடுத்தும் விதமாகவும், உணவில் அயோடின் மற்றும் இரும்பு சத்து கலந்த உப்பு பயன்பாட்டினை கருப்பொருளாக கொண்டும், இந்திய உணவு நிர்ணய ஆணைய வழிகாட்டுதலின்படி சைக்கிள் ஊர்வலம் நடைபெறுகிறது.

குழந்தைகள், பெண்கள் மற்றும் மாணவிகள் எளிதில் இதுகுறித்து அறிந்துகொள்ளும் விதமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்த சைக்கிள் ஊர்வலம் உலக உணவு தினமான கடந்த மாதம் 16-ந் தேதி இந்தியாவின் முக்கியமான 6 இடங்களில் தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் 100 நாட்கள், 6,500 கி.மீட்டர் பயணம் மேற்கொண்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி தலைநகர் டெல்லியில் இந்த பயணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி நிறைவடைய உள்ளது.

தமிழகம் வழியாக வரும் சைக்கிள் ஊர்வலம் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டது ஆகும். இந்த ஊர்வலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூரு செல்கிறது.

இந்த சைக்கிள் ஊர்வலம் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த குழுவினர் நாமக்கல் மாவட்டத்தின் எல்லையான குமாரபாளையம் வழியாக பயணித்து சேலம் மாவட்டத்தை அடைந்தனர். இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் ஆரோக்கிய பாரத விழிப்புணர்வு நிகழ்ச்சி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் குமாரபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் பத்மாவதி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சைக்கிளில் ஊர்வலமாக வந்த குழுவினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Next Story