3 மாதத்தில் மணல் கடத்தல் தொடர்பாக 231 பேர் கைது - போலீஸ் கண்காணிப்பு தீவிரம்


3 மாதத்தில் மணல் கடத்தல் தொடர்பாக 231 பேர் கைது - போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
x
தினத்தந்தி 6 Nov 2018 4:30 AM IST (Updated: 6 Nov 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் மணல் கடத்தல் தொடர்பாக 231 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சிபி சக்ரவர்த்தி கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி பொறுப்பேற்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட இவர் உத்தரவிட்டார். குறிப்பாக மணல் கடத்தலை தடுக்க தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளவும், மணல் கடத்தல் வாகனங்களை பறிமுதல் செய்யவும், மணல் கடத்துபவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை என 3 மாதங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மூலம் மணல் கடத்தல் தொடர்பாக 253 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் 231 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 125 மாட்டு வண்டிகள், 43 லாரிகள், 62 டிராக்டர்கள், 4 பொக்லைன் எந்திரங்கள், இதர வாகனங்கள் 28 என மொத்தம் 262 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

அது மட்டுமின்றி கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் வழிப்பறி, கொள்ளை, கொலை, மணல் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் தொடர்பாக 47 பேர் மீது மாவட்ட காவல் துறை மூலம் குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது. இதில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 12 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story