மாவட்டத்தில் பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க 13 தனிப்படை - போலீஸ் சூப்பிரண்டு தகவல்


மாவட்டத்தில் பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க 13 தனிப்படை - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 6 Nov 2018 3:30 AM IST (Updated: 6 Nov 2018 4:04 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகை அன்று அரசு நிர்ணயித்ததை தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க 13 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் கூறினார்.

திண்டுக்கல், 

தீபாவளி பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய நினைவுக்கு வருவது பட்டாசு தான். தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்று ஆகும். இந்த நிலையில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி, தமிழக அரசு கோர்ட்டில் வலியுறுத்தியது. ஆனால் 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், நேரத்தை அரசு முடிவு செய்துகொள்ளலாம் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கிடையே தமிழகத்தில், நிர்ணயிக்கப்பட்டதை தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலும், அரசு நிர்ணயித்துள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும், மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

தீபாவளி பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. அந்த நேரத்தில் தான் திண்டுக்கல் மாவட்டத்திலும் பட்டாசு வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை பொதுமக்கள் வெடிக்கக்கூடாது. மேலும் கோவில்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது. அவ்வாறு வெடித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனை கண்காணிக்க திண்டுக்கல் மாவட்டத்தில் 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த பகுதியில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் இந்த தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் திண்டுக்கல், நத்தம், பழனி, கொடைக்கானல், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு உள்ளிட்ட நகர் பகுதிகளை அதிக அளவு கண்காணிப்பார்கள்.

அவர்கள் அந்த பகுதிகளில் ரோந்து சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது அரசு நிர்ணயித்த நேரத்தை தவிர்த்து மற்ற நேரத்தில் யாராவது பட்டாசு வெடித்தால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள். இதையடுத்து உடனே ஜாமீனில் விடுவிக்கப்படுவார்கள். குழந்தைகள் யாராவது பட்டாசு வெடித்தால், அவர்களுடைய பெற்றோர் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story