புதுவை மக்களின் முன்னேற்றத்தை தடுக்கும் முட்டுக்கட்டைகள் அகற்றப்படும் தீபாவளி வாழ்த்து செய்தியில், நாராயணசாமி தகவல்
புதுவை மாநில மக்களின் முன்னேற்றத்தை தடுக்கும் முட்டுக்கட்டைகள் அகற்றப்படும் என்று தீபாவளி வாழ்த்து செய்தியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி,
தீபாவளி பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இன்று தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகையை அனைவரும் கொண்டாடி மகிழும் அற்புதமான திருநாளாகும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியோடு புத்தாடை உடுத்தி, இனிப்புகளோடு கொண்டாடும் திருநாள் தீபாவளியாகும். நம் முன்னோர்கள் குடும்ப ஒற்றுமையை பேணவும், உற்றார், உறவினர், அக்கம்பக்கத்தினர் ஆகியோருடன் நல்லுறவை பேணவும், விழாக்களையும், பண்டிகைகளையும் ஏற்படுத்தியுள்ளனர். அதனையே நாமும் பின்பற்றி மகிழ்ச்சியோடு பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம். அதேபோல் வறியவர்களும், ஏழைக் குழந்தைகளும், சேவை இல்லங்களில் உள்ளவர்களும் இந்த திருநாளை இனிமையாக கொண்டாட நம்மால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை மகிழ்வித்து நாமும் பெருமை பெறலாம்.
முட்டுக்கட்டைகள் அகற்றப்படும்
உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என் தலைமையிலான புதுச்சேரி அரசு நம் மாநில மக்கள் இந்த தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட மாநில வரலாற்றிலேயே முதல்முறையாக அனைத்து சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000, மற்றும் அனைத்து மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.675 பணமாக வழங்கி உங்களின் மகிழ்ச்சியில் பங்கெடுத்து, உங்களோடு இணைந்து இந்த தீபாவளி திருநாளை கொண்டாடுகிறது.
மக்களை கொடுமைப்படுத்திய நரகாசுரன் என்னும் அரக்கன் அழிக்கப்பட்ட நாளாக இந்த தீபாவளி கொண்டாடப்படுகிறது.
புதுவை மாநில மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள முட்டுக்கட்டைகள் அகற்றப்பட்டு, மாநிலம் வளர்ச்சிப்பாதையில் பயணிக்க தொடங்கும் அந்த இனிய தருணத்தையும், விரை வில் நாம் கொண்டாட விருக்கிறோம் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
தடையாக கருதாமல்...
சிறுவர்களும், பெரியவர்களும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி குறிப்பிடப்பட்டுள்ள நேரங்களில் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அதனை ஒரு தடையாக கருதாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் செய்யும் சேவையாக கருதி ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த இனிய தீபாவளி திருநாளில் புதுச்சேரி மக்களின் வாழ்வில் எல்லா வளமும், நலமும், மகிழ்ச்சியும் பொங்கிட வேண்டும் என வேண்டி, புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
சபாநாயகர்
சபாநாயகர் வைத்திலிங்கம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி யூனியன் பிரதேச மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தீப ஒளி திருநாளே தீபாவளி பண்டிகையாகும். நம்மிடம் உள்ள தீமை மற்றும் அறியாமை ஆகியவை விலகிட வேண்டி தீபாவளி கொண்டாடப்படுகிறது. எனவே அனைவரது உள்ளங்களிலும் தீமை மற்றும் அறியாமை என்னும் இருள் அகற்றி நன்மை என்னும் ஒளி தீபத்தை ஏற்றுவோம்.
இதை வெளிப்படுத்தவே வீடுகளில் தீபஒளி ஏற்றப்படுகிறது. அவ்வாறு ஏற்றப்படும் தீபஒளி நமது மனதில் உள்ள இருள் என்னும் தீமைகளை ஒழித்து வெளிச்சம் என்னும் நன்மைகளை ஏற்படுத்தவும் இறைவனை வேண்டுகிறேன். நல்ல செயல்களால் தீமையை அழிக்க உறுதியேற்போம். இந்த தீபாவளி திருநாள் புதுச்சேரி மக்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டுவரும் வகையில் அமையட்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை புதுச்சேரி யூனியன் பிரதேச மக்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
அமைச்சர் கந்தசாமி
அமைச்சர் கந்தசாமி விடுத்துள்ள செய்தியில், தன்னம்பிக்கையும், முயற்சியும் வெற்றிக்கான தாரக மந்திரம் என்பதை மனதில் நிறுத்தி அயராது உழைத்து எதிர்கால வாழ்வில் ஒளியேற்றுவோம் என சபதமேற்றிட வருங்கால தூண்களான இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்து மாநிலத்தின் அனைத்து பிராந்திய மக்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அமைச்சர் ஷாஜகான்
அமைச்சர் ஷாஜகான் விடுத்துள்ள செய்தியில், மதங்களை கடந்து மனிதநேயம் வளர்ந்து சகோதரத்துவம் தழைத்து வாழ்வில் பல வெற்றிகளை பெற்று மக்கள் அனைவரும் இன்புற்று வாழும் நாளாக இந்நாள் அமைய எல்லாம்வல்ல ஆண்டவனை வேண்டி என் தீபஒளி திருநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
வையாபுரி மணிகண்டன்
அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள செய்தியில், புதுச்சேரியில் தீமைகள் ஒழிந்து நன்மைகள் குடியேறட்டும். தீபாவளி நன்னாள் எங்கும் தன் ஒளியை நிரப்பட்டும். புதுச்சேரியில் வாழும் ஒவ்வொரு குடும்பங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தட்டும். ஒவ்வொருவரின் முகத்திலும் புன்னகையை கொடுக்கட்டும். மகிழ்ச்சியும், புன்னகையும் என்றென்றும் புதுச்சேரி மக்கள் மனதில் தங்கட்டும் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story