நெல்லை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு பெண் உள்பட 3 பேர் பலி


நெல்லை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு பெண் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 6 Nov 2018 4:42 AM IST (Updated: 6 Nov 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு பெண் உள்பட 3 பேர் இறந்தனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகிறார்கள்.

இதில் ஒருசிலருக்கு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுவரை நெல்லை மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். இதையடுத்து சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான மருத்துவ மற்றும் சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை காமராஜர் தெருவை சேர்ந்தவர் ராஜா. அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி அமலி பிச்சுமணி (வயது 55). இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அவர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு டெங்கு அல்லது பன்றிக்காய்ச்சல் இருக்கிறதா? என்று ரத்த மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, மேல்சிகிச்சைக்காக அமலி பிச்சுமணி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை அமலி பிச்சுமணி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சுகாதார பணியாளர்கள் சிந்துபூந்துறை பகுதியில் கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை அருகே உள்ள நரசிங்கநல்லூரை சேர்ந்தவர் தங்கபாண்டி (40), தொழிலாளியான இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அவர் கசாயம் குடித்து, கைவைத்தியமும் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தங்கபாண்டி வீட்டில் திடீரென்று மயங்கி விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே தங்கபாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் தங்கபாண்டி சாவு குறித்து விசாரித்து சுகாதார பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

தென்காசி குளத்தூரான் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (35). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சந்திரசேகர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். மர்ம காய்ச்சலுக்கு சந்திரசேகர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் தற்போது 20 பேர் வரை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு அடுத்தடுத்து இறப்பு ஏற்பட்டு வருவதால் பொது மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

எனவே, காய்ச்சல் பரவாமல் தடுக்க மேலும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story