கடலூர் முதுநகர் அருகே: மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; சிறுவன் பலி


கடலூர் முதுநகர் அருகே: மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; சிறுவன் பலி
x
தினத்தந்தி 6 Nov 2018 4:00 AM IST (Updated: 6 Nov 2018 4:51 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகர் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே உள்ள பூண்டியாங்குப்பம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத் தொழிலாளி. இவரது மகன் ஹரிஷ்(வயது 5). இவன் அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஹரிசுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவனை சிகிச்சைக்காக வினோத் மோட்டார் சைக்கிளில் திருச்சோபுரத்தில் உள்ள ஆரம்பசுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.

கடலூர் முதுநகர் ஆலப்பாக்கம் ரெயில்வே கேட் அருகே வந்தபோது சிதம்பரத்தில் இருந்து கடலூரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வினோத், ஹரிஷ் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஹரிஷ் பரிதாபமாக இறந்தான். வினோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் சிறுவன் பலியான தகவல் அறிந்து அவனது தாய் மற்றும் உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்து ஹரிசின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இன்று(செவ்வாய்க்கிழமை) தீபாவளி பண்டிகை என்பதால் ஹரிசுக்கு அவனது பெற்றோர் புத்தாடை, பட்டாசு வாங்கி வைத்திருந்தனர். ஆனால் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பூண்டியாங்குப்பம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story