தீபாவளி பண்டிகையையொட்டி: 1,160 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள் -சூப்பிரண்டு சரவணன் தகவல்
Diwali festival: 1,160 policemen engage in security work - Superpower Saravanan information
கடலூர்,
தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டம் முழுவதும் 1,160 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகை இன்று(செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பஸ்நிலையம், ரெயில் நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் வகையில் குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடையில் வலம் வருகின்றனர். நெடுஞ்சாலை பிரிவு போலீசார் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். மேலும் மது கடத்தலை தடுக்க மாவட்டத்தின் எல்லையில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு இரவு பகலாக வாகன சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் சில இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையையொட்டி பஸ்நிலையம், ரெயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ்காரர்கள், ஆயுதப்படை மற்றும் சிறப்புகாவல் படை போலீசார் என மாவட்டம் முழுவதும் 1,160 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வருவதை தடுக்க சோதனை சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்கலாம் என சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறது. எனவே பொதுமக்கள் கோர்ட்டு உத்தரவின்படி பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் வெடித்து விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, மாவட்ட மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story