தமிழகம் முழுவதும் 150 மோட்டார் சைக்கிள்களை திருடிய கும்பல் தலைவன் கைது - தலைமறைவான 5 பேருக்கு வலைவீச்சு


தமிழகம் முழுவதும் 150 மோட்டார் சைக்கிள்களை திருடிய கும்பல் தலைவன் கைது - தலைமறைவான 5 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Nov 2018 3:15 AM IST (Updated: 7 Nov 2018 10:48 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் 150 மோட்டார் சைக்கிள்களை திருடிய கும்பல் தலைவனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவை,

கோவை மாநகர பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையை சேர்ந்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் கோவையில் இருந்து திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் ஆம்னி பஸ்கள் மூலம் நெல்லை மாவட்டத்துக்கு கடத்தப்பட்டு, அங்கு விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இது தொடர்பாக நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த ரசூல் முகைதீன் (வயது 43) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது நண்பர்களான இசக்கிபாண்டி, மாடசாமி, துரை, மொய்தீன், மூசா ஆகியோருடன் சேர்ந்து பல மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 41 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். பின்னர் போலீசார் ரசூல் முகைதீனை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இசக்கிபாண்டி உள்பட 5 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ரசூல் முகைதீனிடம் நடத்திய விசாரணையில் வெளியான தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:-

இந்த கும்பலுக்கு ரசூல் முகைதீன் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளார். அவர் கோவையில் உள்ள புரூக் பீல்டு, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, கிராஸ்கட் ரோடு, அவினாசி சாலை ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருக்கும் மோட்டார் சைக்கிள்களை மிகவும் எளிதாக திருடி உள்ளார். முதலில் நோட்டமிடுவார்.பின்னர் கள்ளச்சாவி போடுவார்.அது முடியாவிட்டால் ஒயர்களை அறுத்தோ, அல்லது லாக்கை உடைத்தோ திருடி சென்று விடுவார்.யாராவது சந்தேகப்பார்வை பார்த்தால் அருகில் ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு பின்னர் வந்து எடுத்து சென்று விடுவார்.அதை ஏதாவது ஒரு வாகன காப்பகத்தில் நிறுத்தி விட்டு ஒரு வாரம் கழித்து அங்கு சென்று அந்த மோட்டார் சைக்கிளை ஆம்னி பஸ்கள் மூலம் நெல்லைக்கு அனுப்பி உள்ளார்.

பின்னர் அங்குள்ள தனது நண்பர்களான இசக்கி பாண்டி, மாடசாமி, துரை, மொய்தீன் மற்றும் துரை ஆகியோருக்கு தகவல் தெரிவித்து விடுவார். அவர்கள் அந்த மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொண்டு அவற்றை விற்று, தங்களுக்குரிய பங்கு தொகையை எடுத்துவிட்டு மீதி உள்ள தொகையை ரசூல் முகைதீன் வங்கி கணக்கில் செலுத்தி விடுவார்கள். அந்த பணத்தை எடுத்து அவர் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார்.

மேலும் இவர் கோவை மட்டுமல்லாமல் திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 150 மோட்டார் சைக்கிள்களை திருடி உள்ளார். அவற்றின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கும் அதிகம் ஆகும். தற்போது அவரிடம் இருந்து 41 மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story