கேரட் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி - ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை


கேரட் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி - ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை
x
தினத்தந்தி 7 Nov 2018 10:00 PM GMT (Updated: 7 Nov 2018 5:40 PM GMT)

கேரட் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயமே பிரதானமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மலை காய்கறிகளான முட்டை கோஸ், காலி பிளவர், உருளை கிழங்கு, நூல்கோல், பீன்ஸ், மேரக்காய், முள்ளங்கி, பீட்ருட், கேரட் போன்றவற்றை பயிரிட்டு வருகிறார்கள். இங்கு பயிரிடப்படும் மலை காய்கறிகள் பெரும்பாலும் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா, காவிலோரை, கைகாட்டி, ஈளாடா, கதவுத்தொரை, கூக்கல்தொரை, கட்டபெட்டு உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் மலை காய்கறிகளை அதிக அளவில் பயிரிட்டு உள்ளனர்.

தற்போது ஒரு கிலோ கேரட் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டியில் ரூ.55 முதல் ரூ.60 வரையிலும் கோத்தகிரி காய்கறி மண்டிகளில் 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும் கொள்முதல் செய்யப்படுகிறது. கேரட்டுக்கு கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால் கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதையடுத்து விவசாயிகள் அறுவடை செய்து காய்கறி மண்டிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து ஈளாடா பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

தொழிலாளர்கள் பற்றாக்குறை, வனவிலங்குகள் தொல்லை, இடுபொருட்களின் விலையேற்றம், மலை காய்கறிகளுக்கு நிலையான விலை கிடைக்காதது போன்ற கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு வங்கிக்கடன் வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். ஒரு கிலோ உயர்ரக ரொமான்ஸ் கேரட் விதைக்கு ரூ.25 ஆயிரம் செலவாகிறது.

இது போன்ற உயர் ரக விதைகளை வாங்கி விதைத்து பயிர்களை பராமரித்து வருகிறோம். சுமார் 80 முதல் 90 நாட்களுக்குள் கேரட் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விடும். கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலத்தில் வெள்ள சேதம் ஏற்பட்ட போது மலை காய்கறிகள் அங்கு அனுப்புவது தடைபட்டது.

எனவே தோட்டங்களில் அறுவடை செய்த கேரட்டுக்கு காய்கறி மண்டிகளில் கிலோவுக்கு 2 ரூபாய் மட்டுமே கிடைத்தது. இதனால் கேரட்டை கால்நடைகளுக்கு உணவாக கொட்டும் நிலை உருவாகி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து படிப்படியாக கேரட் விலை உயர்ந்ததால் பெரும்பாலான விவசாயிகள் மீண்டும் கேரட் பயிரிட்டு உள்ளனர். கோத்தகிரி காய்கறி மண்டிகளில் ரூ.40 முதல் ரூ.50 வரை விலை கிடைக்கிறது. தற்போது கொள்முதல் விலை உயர்ந்ததால் கடந்த முறை ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட முடிந்ததுடன் ஓரளவுக்கு லாபமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story