திண்டுக்கல் அருகே: இருதரப்பினர் இடையே மோதல்; 15 பேர் கைது


திண்டுக்கல் அருகே: இருதரப்பினர் இடையே மோதல்; 15 பேர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2018 3:30 AM IST (Updated: 8 Nov 2018 12:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-

திண்டுக்கல், 

திண்டுக்கல் அருகே காப்பிளியபட்டியில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். இந்தநிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சிலை வைத்து வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தரப்பினர் மட்டும் விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர்.

இதேபோல் கடந்த ஆண்டு அந்த தரப்பினர் விநாயகர் சிலை வைக்க முயன்றனர். அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின்போது, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை அன்று சாலையோரத்தில் சிலர் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது மற்றொரு தரப்பை சேர்ந்த வாலிபர் ஒருவர் அங்கு வந்துள்ளார். அவரை மது அருந்தியவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து அந்த வாலிபர் தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர் தரப்பினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இரு தரப்பினரும் கோஷ்டிகளாக மோதிக்கொண் டனர். அப்போது 2 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதுகுறித்து அறிந்த தாடிக்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார், அங்கு விரைந்து சென்று அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இரு தரப்பையும் சேர்ந்த மதுரைவீரன் (40), முத்துப்பாண்டி, பிரசாத், குமரவேல், முருகன், சுரேஷ், அருண்குமார், முருகேசன், மணிவேல், அருணாச்சலம், நரேந்திரன், தீபகுமார், ராஜசேகர், ராஜபாண்டி, மற்றொரு மணிவேல் ஆகிய 15 பேரை கைது செய்தனர். தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story