நாகல்நகர் மேம்பாலத்தில் டயர் வெடித்து லாரி கவிழ்ந்தது
திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலத்தில் வந்தபோது, டயர் வெடித்ததில் நடு ரோட்டில் லாரி கவிழ்ந்தது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கோட்ட இந்திய நுகர்பொருள் வாணிப கிட்டங்கிக்கு வடமாநிலங்களில் இருந்து ரேஷன் பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. அதன்படி அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் ரெயில் மூலம் திண்டுக்கல்லுக்கு கொண்டு வரப்படுகிறது. ரெயில் நிலையத்தில் இருந்து லாரிகள் மூலம் அந்த சரக்குகள் கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று காலையில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பழனி சாலையில் உள்ள கிட்டங்கிக்கு லாரி ஒன்று சென்றுகொண்டு இருந்தது. நத்தம்-திண்டுக்கல் சாலையில் உள்ள நாகல்நகர் மேம்பாலத்தில் லாரி வந்தபோது, முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மேம்பால தடுப்பு சுவரில் மோதி, சாலையில் கவிழ்ந்தது. இதில் பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்தது.
லாரியில் இருந்த அரிசி மூட்டைகளும் சாலையில் சிதறி கிடந்தன. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சாலையில் கிடந்த மூட்டைகளை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை கிரேன் மூலம் மீட்டு அப்புறப்படுத்தினர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் லாரி டிரைவர் காயமின்றி தப்பினார்.
Related Tags :
Next Story