தீபாவளி செலவுக்கு கடன் வாங்கியதால் தகராறு: மனைவியை குத்திக் கொன்ற தொழிலாளி
ஆண்டிப்பட்டி அருகே தீபாவளி பண்டிகை செலவுக்கு கடன் வாங்கியதால் ஏற்பட்ட தகராறில் மனைவியை குத்திக் கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கண்டமனூர்,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமனூர் அடைக்கன்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்வரன். கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி நேசமணி (40). இவர் தீபாவளி செலவுக்காக அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த ரமேஷ்வரன், தனக்கு தெரியாமல் கடன் வாங்கியிருக்கிறாயா? என்று கூறி மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கோபித்து கொண்டு நேசமணி, பொன்னம்மாள்பட்டியில் வசிக்கும் ரமேஷ்வரனின் பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற ரமேஷ்வரன், மீண்டும் தனது மனைவியிடம் தகராறு செய்து கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. மேலும் திருப்புளியால் நெற்றியில் குத்தியுள்ளார்.
இதில் அதிகளவு ரத்தம் வெளியேறியதால் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்வரனை கைது செய்தனர். மனைவியை, கணவரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story