சென்னை விமான நிலையத்தில் காந்தியடிகள் பற்றிய கண்காட்சி


சென்னை விமான நிலையத்தில் காந்தியடிகள் பற்றிய கண்காட்சி
x
தினத்தந்தி 8 Nov 2018 3:45 AM IST (Updated: 8 Nov 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சென்னை விமான நிலையத்தில் காந்தி மூலை கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு வருகை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியை இந்திய விமான ஆணையகத்தின் தலைவர் அஞ்சலி மகாபாத்ரா அண்மையில் திறந்து வைத்தார்.

கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள தொலைபேசியில் ‘ரிசீவரை’ எடுத்து பொத்தானை அழுத்தியபின்னர் காதில் வைத்தால் காந்தியடிகளின் குரல் கேட்கும். மேலும் மராட்டியத்தில் உள்ள சேவா கிராம் ஆசிரமத்தின் சிறிய மாதிரி, கைராட்டை, கலை பொருட்களின் மாதிரிகள், காந்தியடிகளின் தமிழ்நாட்டு வருகையையும், இங்குள்ள தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடன் அவர் உரையாடுவதையும் காட்டும் புகைப்படங்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

பயணிகள், குறிப்பாக அடுத்த தலைமுறைக்கு, தேசத்தந்தையின் வாழ்க்கையையும், பணிகளையும் எடுத்துரைக்கும் விதமாக பிரம்மாண்டமான திரைகளில் காந்தி திரைப்படங்கள், வீடியோக்களும் திரையிடப்படுகின்றன. சென்னை விமான நிலையத்திற்கு வந்து போகும் பயணிகளை இந்த கண்காட்சி பெரிதும் ஈர்த்துள்ளது.

புதுடெல்லி ராஜ்காட்டில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்துடன் இணைந்து சென்னை விமான நிலையம் இந்த கண்காட்சியை அமைத்துள்ளது.

மேற்கண்ட தகவல் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story