கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 46 பேர் மீது வழக்கு


கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 46 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 Nov 2018 3:45 AM IST (Updated: 8 Nov 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 46 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

தஞ்சை மாவட்டத்தில், அரசு நிர்ணயித்துள்ளதை விடுத்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க தனிப்படைகள் அமைத்து போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு வெடிப்பவர்களை கண்காணித்தனர்.

தஞ்சை காமாட்சி அம்மன் கோவில் முன்பு பட்டாசு வெடித்ததாக மேலவீதி விஸ்வபண்டிதர் தெருவை சேர்ந்த முருகானந்தம்(வயது 28), பூக்கார சுப்ரமணியர் கோவில் தெரு பகுதியில் பட்டாசு வெடித்ததாக அதே பகுதியை சேர்ந்த சூர்யா(27), மாரியம்மன் கோவில் தாமரை குளக்கரை மற்றும் சாலியகுளக்கரையில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக விக்கி(24), மாயகலை(50) ஆகியோர் மீது தஞ்சை மேற்கு, தெற்கு, தாலுகா ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதேபோல ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர், திருச்சிற்றம்பலம், திருவையாறு, அம்மாப்பேட்டை, கபிஸ்தலம், அய்யம்பேட்டை, பாபநாசம், சுவாமிமலை, பட்டீஸ்வரம், நாச்சியார்கோவில் ஆகிய போலீஸ் நிலையங்களிலும் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 46 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story