சென்னையில், பட்டாசு வெடித்ததில் 41 பேர் காயம் கடந்த ஆண்டை விட 24 சதவீதம் குறைவு


சென்னையில், பட்டாசு வெடித்ததில் 41 பேர் காயம் கடந்த ஆண்டை விட 24 சதவீதம் குறைவு
x
தினத்தந்தி 8 Nov 2018 5:00 AM IST (Updated: 8 Nov 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் தீபாவளியையொட்டி 61 தீ விபத்துகள் நடந்துள்ளன. பட்டாசு வெடித்ததில் 41 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சென்னை,

சென்னையில், நேற்று முன்தினம் தீபாவளியையொட்டி காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு 61 அழைப்புகள் வந்திருக்கின்றன. இதில் 58 அழைப்புகள் சிறிய அளவிலான தீ விபத்துகளையும், மீதமுள்ள 3 அழைப்புகள் எளிதில் கட்டுப்படுத்தக்கூடிய தீ விபத்துகளையும் குறிப்பிட்டவை ஆகும். இதுதவிர 4 அழைப்புகள் மீட்பு நடவடிக்கைக்காக வந்தன.

கடந்த ஆண்டு தீபாவளி நேர தீ விபத்துகளின் எண்ணிக்கை 46 ஆக இருந்தது. இந்தாண்டு தீ விபத்துகள் எண்ணிக்கை 28 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

தீக்காய சிகிச்சை

தீபாவளி நேர தீக்காய சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று 25 பேர் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீக்காயத்துக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 8 பேர் மட்டும் உள்நோயாளிகள்.

சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் 16 பேர் பட்டாசு வெடித்து உண்டான தீக்காயத்துக்கு சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். அந்தவகையில் சென்னையில் நேற்று 41 பேர் தீக்காய சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். இதுதவிர சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரி, ஓமந்தூரார் பன்னோக்கு அரசு ஆஸ்பத்திரி, கஸ்தூரிபா காந்தி அரசு ஆஸ்பத்திரிகளில் நேற்று தீக்காய சிகிச்சைக்காக யாரும் அனுமதிக்கப்படவில்லை.

24 சதவீதம் குறைவு

சென்னையில் கடந்த ஆண்டு தீபாவளியன்று பட்டாசு வெடித்ததில் 58 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றனர். அதனுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு தீக்காயம் அடைந்தோரின் எண்ணிக்கை 24 சதவீதம் குறைந்திருக்கிறது.

Next Story