வரதராஜபுரம் ஊராட்சியில் கலெக்டரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
வரதராஜபுரம் ஊராட்சியில் கலெக்டரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பூந்தமல்லி, பாரிவாக்கம், சென்னீர்குப்பம் போன்ற பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியாக இருப்பதால் இந்த சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப் படுத்தவும், சாலையை சீரமைக்கவும் தேவைப்படும் இடங்களில் பாலம் அமைப்பது குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் நேற்று அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து நசரத்பேட்டை, வரதராஜபுரம் ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டார். வரதராஜபுரம் ஊராட்சியில் ஆய்வில் ஈடுபட்டபோது இங்கு கழிவுநீர் குளம் போல் தேங்கி இருப்பதால் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. அருகில் உள்ள குளத்தில் கழிவுநீர் தேங்கியிருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படுகிறது என்று கூறி பொதுமக்கள் கலெக்டரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளை கண்டித்தார்
இதையடுத்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்த கலெக்டர் புகார் கூறிய பொதுமக்கள் முன்னிலையில் நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, தாசில்தார் புனிதவதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மழை நீர் கால்வாய்களில் லாரிகளில் கொண்டு வந்து ஊற்றப்படும் கழிவு நீர் நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் வீடுகளில் இருந்து கால்வாய்களில் விடப்படும் கழிவுநீரை அகற்றும் பனியும் நடைபெறுவதாக தெரிவித்தார்.
அவருடன் திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால், ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Related Tags :
Next Story