மானாமதுரை ரோட்டில் திரியும் மாடுகளால் போக்குவரத்து நெரிசல்


மானாமதுரை ரோட்டில் திரியும் மாடுகளால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 7 Nov 2018 10:00 PM GMT (Updated: 7 Nov 2018 7:30 PM GMT)

மானாமதுரையில் ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

மானாமதுரை,

மானாமதுரை நகரில் நாளுக்கு நாள் ரோட்டில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. மானா மதுரையில் ஏராளமானோர் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை வளர்த்து அதன் மூலம் லாபம் ஈட்டி வருகின்றனர். அவர்கள் தங்களின் கால்நடைகளை முறையாக வளர்ப்பதில்லை. அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லாமல் ரோட்டில் அவிழ்த்து விட்டு விடுகின்றனர்.

ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளால் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. மானாமதுரை அண்ணாசிலை, பைபாஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் கூட்டம் கூட்டமாக நடுரோட்டில் நின்று போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் பலர் கால்நடைகளால் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

மேலும் கால்நடைகளின் கழிவுகள் ஆங்காங்கே கிடப்பதால் துர்நாற்றம் வீசி சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பேரூராட்சி நிர்வாகத்திடம் இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் மாடுகளுக்குள் மோதல் ஏற்பட்டு நடுரோட்டில் சண்டையிடுவதால் பொதுமக்கள் நடமாட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் அச்சத்துடனேயே நடமாடி வருகின்றனர். எனவே மானாமதுரையில் கால்நடைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகமும், போக்குவரத்து காவல் துறையினரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story