திருமணம் செய்ய மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளிப்பு - காதலனுக்கு வலைவீச்சு


திருமணம் செய்ய மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளிப்பு - காதலனுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Nov 2018 3:30 AM IST (Updated: 8 Nov 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் காதலி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

வேட்டவலம்,


வேட்டவலத்தை அடுத்த அணுக்குமலை கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் வீராசாமி (வயது 32), திருவண்ணாமலையில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். கோணலூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் மகள் வாசுகி (27), திருவண்ணாமலையில் உள்ள தனியார் கார்மெண்ட்சில் வேலை செய்து வருகிறார்.

இவர்கள் இருவரும் தினமும் ஒரே பஸ்சில் வேலைக்கு சென்று வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்துள்ளனர்.

கடந்த 4-ந் தேதி வாசுகி, வீராசாமிக்கு தீபாவளி பண்டிகைக்காக புத்தாடை வாங்கிக்கொண்டு வேட்டவலம் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் அணுக்குமலைக்கு சென்றனர். அணுக்குமலை செல்லும் வழியில் ஒரு இடத்தில் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வாசுகி கொடுத்த புத்தாடையை வீராசாமி வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

மேலும் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். அதற்கு வீராசாமி என் அண்ணனின் திருமணம் நடந்த பிறகுதான் நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வாசுகி மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை பிடித்து தன் மீது ஊற்றி தீவைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் தீக்காயம் அடைந்த அவரை, வீராசாமி மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து வாசுகி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி வழக்குப்பதிவு செய்து, வீராசாமியை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story