மாவட்ட செய்திகள்

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடி டாக்டர் மீது போலீசில் புகார் + "||" + Conduct Diwali Rs 20 lakh fraud Complain about the doctor

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடி டாக்டர் மீது போலீசில் புகார்

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடி டாக்டர் மீது போலீசில் புகார்
தீபாவளி சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடி செய்துவிட்டதாக டாக்டர் குமார் மீது பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளார்கள்.
சென்னிமலை,

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் குமார் (வயது 70). டாக்டரான இவர் திருப்பூர் மாவட்டம் சிவன்மலை பகுதியில் கிளினிக் வைத்துக்கொண்டு கிராமம், கிராமமாக சென்று மருத்துவம் பார்த்து வந்தார். கடந்த பல வருடங்களாகவே காங்கேயம், சென்னிமலை பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று மருத்துவம் பார்த்து வந்ததால் கிராமத்து மக்களிடம் இவருக்கு நன்கு பழக்கம் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி தீபாவளி பலகார சீட்டு மற்றும் தை பொங்கல் சீட்டு நடத்தி பொதுமக்களிடம் வாரந்தோறும் ரூ.50, ரூ.100 மற்றும் ரூ.150 என்று வசூல் செய்து வந்தார். இதனை வரவு வைப்பதற்காக ஒவ்வொருவருக்கும் அட்டையும் கொடுத்திருந்தார்.


இந்தநிலையில் சீட்டு போட்டவர்கள் தீபாவளிக்கு 2 நாட்கள் முன்னதாக பலகாரம் மற்றும் கட்டிய பணத்தை திரும்ப பெறுவதற்கு குமாரை பார்க்க சிவன்மலைக்கு சென்றனர். ஆனால் அங்கு அவருடைய கிளினிக் பூட்டி கிடந்துள்ளது. மேலும் அவருடைய செல்போனும் அணைத்துவைக்கப்பட்டு இருந்தது. இதனால் காங்கேயம் பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு காங்கேயம் போலீஸ் நிலையத்தில் டாக்டர் குமார் மீது மோசடி புகார் கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில், சென்னிமலை அருகே உள்ள குப்பம்பாளையம், ராமலிங்கபுரம், சக்தி நகர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 20 பேர் நேற்று சென்னிமலை போலீஸ் நிலையத்தில் குமார் மீது புகார் கொடுக்க வந்தனர்.

அப்போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில், ‘டாக்டர் குமார் பல வருடங்களாக எங்கள் கிராம பகுதியில் மருத்துவம் பார்த்து வந்ததார். அதனால் அவரை நம்பி நாங்கள் தீபாவளி சீட்டு மற்றும் தை பொங்கல் சீட்டுக்கு பணம் செலுத்தி வந்தோம். தற்போது எங்கள் அனைவரையும் அவர் ஏமாற்றி சென்று விட்டார். நாங்கள் அனைவரும் கூலி வேலைக்கு சென்று வாங்கிய பணத்தை இவரிடம் கொடுத்து ஏமாந்து விட்டோம்‘ என்றார்கள்.

சென்னிமலை, காங்கேயம், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் ரூ.20 லட்சம் வரை டாக்டர் குமார் சீட்டு பணம் வசூலித்து மோசடி செய்துள்ளதாக தெரியவருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.