கொடுமுடிக்கு தீர்த்தம் எடுக்க வந்த வாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி சாவு


கொடுமுடிக்கு தீர்த்தம் எடுக்க வந்த வாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி சாவு
x
தினத்தந்தி 8 Nov 2018 3:45 AM IST (Updated: 8 Nov 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

கொடுமுடிக்கு தீர்த்தம் எடுக்க வந்த வாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தார்.

ஊஞ்சலூர்,

திண்டுக்கல் மாவட்டம் பழனி சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன். அவருடைய மனைவி லட்சுமி. மகன் ஜெகதீஷ் (வயது 19).

சின்னவேடம்பட்டியில் உள்ள மதுரைவீரன் கோவிலில் தற்போது பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. அதனால் அந்த பகுதியை சேர்ந்த சுமார் 40 பேர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுப்பதற்காக நேற்று முன்தினம் வந்தார்கள். இவர்களுடன் ஜெகதீசும் தன் சித்தப்பா கிருஷ்ணனுடன் வந்தார்.

இந்தநிலையில் பகல் 2 மணி அளவில் கொடுமுடி சுல்தான்பேட்டை மணல்மேடு காவிரி ஆற்றில் அனைவரும் குளித்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது ஜெகதீஷ் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். அருகே குளித்துக்கொண்டு இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. உடனே தண்ணீரில் தேடிப்பார்த்தார்கள். மாலை 6.30 மணி அளவில் அவரின் உடலைத்தான் மீட்க முடிந்தது. இதுபற்றி கொடுமுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள்.

தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றார்கள். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜெகதீஷ் தண்ணீரில் மூழ்கி இறந்தது பற்றி அவருடைய பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அலறி துடித்தபடி கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்கள். மகனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story