குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் சாவு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது


குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் சாவு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 8 Nov 2018 4:30 AM IST (Updated: 8 Nov 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

பத்மநாபபுரம்,

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதில் பலருக்கு பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளோடு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தக்கலை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள பன்றிக்காய்ச்சல் வார்டுகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் பாதிப்பு குறைந்தபாடில்லை.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு திரேஷா பிரைட் (வயது 60) என்ற பெண்ணும், சுகன்யா என்ற கர்ப்பிணி, தெங்கம்புதூரைச் சேர்ந்த வக்கீல் ரவிச்சந்திரன் (52) என்பவரும் இறந்தனர்.

3 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியான சம்பவம் குமரி மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தக்கலை பகுதியில் மேலும் ஒருவர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார். இதனால் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

தக்கலை அருகே திருவிதாங்கோடு புதுப்பள்ளியை சேர்ந்தவர் சக்ரியா (50). இவருக்கு 4 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சக்ரியா முன்னாள் இமாம் ஆக இருந்துள்ளார். இந்தநிலையில் அவருக்கு சமீபத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பு குறையாததால் திருவிதாங்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து திருவிதாங்கோடு பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் மேலும் ஒருவர் பன்றி காய்ச்சலால் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story