நெல்லிக்குப்பத்தில் தண்ணீர் தொட்டிக்குள் தொழிலாளி பிணம் - கொலையா? போலீசார் விசாரணை


நெல்லிக்குப்பத்தில் தண்ணீர் தொட்டிக்குள் தொழிலாளி பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 Nov 2018 3:00 AM IST (Updated: 8 Nov 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பத்தில் தண்ணீர் தொட்டிக்குள் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையின் அருகே உரம் தயாரிப்பதற்காகவும், கழிவுகளை கொட்டுவதற்காகவும் சேமிப்பு கிடங்கு இருக்கிறது. மேலும் இந்த சேமிப்பு கிடங்கில் பெரிய அளவிலான சிமெண்டிலான 3 தண்ணீர் தொட்டிகளும் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியை ஆலை நிர்வாகம் பயன்படுத்தாமல் இருந்து வந்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக, அந்த 3 தொட்டிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சேமிப்பு கிடங்கில் உள்ள ஒரு தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அந்த தொட்டியை பார்த்தனர். அப்போது அங்கு 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனே இதுபற்றி நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தொட்டிக்குள் பிணமாக கிடந்தவரின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது, நெல்லிக்குப்பம் சத்திரம் தெருவை சேர்ந்த தொழிலாளி கிட்டு என்கிற வெங்கடேசன் (வயது 45) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் வெங்கடேசன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தனது குடும்பத்தினரிடம் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறிச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் பதறிய உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் அவர் தண்ணீர் தொட்டிக்குள் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெங்கடேசன் எதற்காக சர்க்கரை ஆலையின் சேமிப்பு கிடங்கு பகுதிக்கு வந்தார்?, அவரை யாரேனும் கொலை செய்து, இங்கு வந்து உடலை வீசி விட்டு சென்றனரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வெங்கடேசனுக்கு கெஜலட்சுமி(38) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story