பெங்களூருவில் ஏ.டி.எம். மையங்களில் நிரப்ப வைத்திருந்த ரூ.75 லட்சத்துடன் வாகனத்தை ஓட்டிச் சென்ற டிரைவர்


பெங்களூருவில் ஏ.டி.எம். மையங்களில் நிரப்ப வைத்திருந்த ரூ.75 லட்சத்துடன் வாகனத்தை ஓட்டிச் சென்ற டிரைவர்
x
தினத்தந்தி 7 Nov 2018 10:30 PM GMT (Updated: 7 Nov 2018 9:17 PM GMT)

பெங்களூருவில் ஏ.டி.எம். மையங்களில் நிரப்ப வைத்திருந்த ரூ.75 லட்சத்துடன் வாகனத்தை டிரைவர் ஓட்டிச் சென்று விட்டார். தலைமறைவான டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு, 

பெங்களூருவில் ஏ.டி.எம். மையங்களில் நிரப்ப வைத்திருந்த ரூ.75 லட்சத்துடன் வாகனத்தை டிரைவர் ஓட்டிச் சென்று விட்டார். தலைமறைவான டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

வாகனத்தை ஓட்டிச் சென்றார்

பெங்களூருவில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனம் வங்கிகளில் இருந்து பணத்தை பெற்று, அந்த வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம். மையங்களில் நிரப்பும் பணியை செய்து வருகிறது. அந்த நிறுவனத்தில் ஸ்ரீசைலா, ஹரீஷ் ஆகிய 2 பேரும் ஊழியர்களாகவும், பாதுகாவலராக அமித் சிங்கும் பணியாற்றுகிறார்கள். அதே நிறுவனத்தில் டிரைவராக அப்துல் சாகித் வேலை செய்தார். பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்புவதற்காக நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில் ரூ.1½ கோடியுடன், ஊழியர்கள் ஸ்ரீசைலா, ஹரீஷ், பாதுகாவலர் அமித் சிங் புறப்பட்டனர். வாகனத்தை டிரைவர் அப்துல் சாகித் ஓட்டினார்.

வெவ்வேறு வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்பிவிட்டு கே.ஜி.ஹள்ளி அருகே நாகவாரா மெயின் ரோட்டில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு வந்தனர். அங்கு பணம் நிரப்புவதற்காக ஸ்ரீசைலா, ஹரீஷ், அமித் சிங் ஆகிய 3 பேரும் சென்றனர். அப்போது வாகனத்திலேயே டிரைவர் அப்துல் சாகித் இருந்தார். இந்த நிலையில், திடீரென்று பணம் இருந்த வாகனத்தை அங்கிருந்து டிரைவர் அப்துல் சாகித் ஓட்டிச் சென்று விட்டார். இதை பார்த்து ஸ்ரீசைலா உள்பட 3 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். அப்துல் சாகித்தை பிடிக்க முயன்றும், அவர் வாகனத்தில் வேகமாக சென்று விட்டார்.

ரூ.75 லட்சத்துடன் தலைமறைவு

இதுபற்றி கே.ஜி.ஹள்ளி போலீசாருக்கு ஊழியர்கள் ஸ்ரீசைலா, ஹரீஷ் தகவல் கொடுத்தார்கள். உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் அதிகாரி சுரேஷ்குமார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த வாகனத்தில் ரூ.75 லட்சம் இருந்ததும், அந்த பணத்துடன் டிரைவர் அப்துல் சாகித் தலைமறைவானதும் தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் ஊழியர்கள் ஸ்ரீசைலா, ஹரீசுக்கு தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கே.ஜி.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டிரைவர் அப்துல் சாகித்தை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story