புலி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சுதீர் முங்கண்டிவார்- மேனகா காந்தி மோதல் பதவி விலக ஒருவரையொருவர் வலியுறுத்தல்
புலி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் மந்திரி சுதீர் முங்கண்டிவார், மத்திய மந்திரி மேனகா காந்தி இடையே மோதல் முற்றியுள்ளது. பதவி விலகுமாறு ஒருவரை ஒருவர் வலியுறுத்தி உள்ளனர்.
மும்பை,
புலி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் மந்திரி சுதீர் முங்கண்டிவார், மத்திய மந்திரி மேனகா காந்தி இடையே மோதல் முற்றியுள்ளது. பதவி விலகுமாறு ஒருவரை ஒருவர் வலியுறுத்தி உள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட புலி
யவத்மால் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 13 பேரை வேட்டையாடியதாக கூறப்படும் பெண் புலி அவ்னி வனத்துறை சார்பில் கடந்த 2-ந் தேதி சுட்டுக்கொல்லப்பட்டது. இதற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தியும் கண்டித்ததோடு, புலியை கொடூரமாக கொன்றது நேரடி குற்றம் என்று சாடினார். துல்லியமாக துப்பாக்கி சுடும் தனியார் ஆட்களை நியமித்து புலியை சுட்டுக் கொன்றது ஏன்? என்று மராட்டிய வனத்துறை மந்திரி சுதீர் முங்கண்டிவாருக்கு அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த பிரச்சினையில் மந்திரி சுதீர் முங்கண்டிவாரை பதவி நீக்கம் செய்யும்படி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை மேனகா காந்தி கேட்டுக் கொண்டு உள்ளார்.
பதிலடி
இதனால் ஆத்திரம் அடைந்த சுதீர் முங்கண்டிவார், நாட்டில் ஊட்டசத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய மந்திரி மேனகா காந்தி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
பா.ஜனதா தலைவர்களான மேனகா காந்தி, சுதீர் முங்கண்டிவார் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல்-மந்திரி பதில்
இதுபற்றி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-
தற்காப்புக்காக தான் புலி சுட்டுக்கொல்லப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் தவறுகள் ஏதும் நடந்திருந்தால் உரிய விசாரணை நடத்தப்படும். இந்த பிரச்சினை குறித்து நான் தனிப்பட்ட முறையில் மேனகா காந்தியிடம் பேசினேன். நடந்த விவரங்களை அவரிடம் விளக்கமாக கூறினேன். வனவிலங்குகள் தொடர்பாக வெளிப்படுத்தப்படும் உணர்வுகளை அரசு மதிக்கிறது. இந்த பிரச்சினையில் சுதீர் முங்கண்டிவாரை பதவி நீக்க வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேனகா காந்தி மீது வழக்கு
இதற்கிைடயே புலியை சுட்டுக்கொன்ற துப்பாக்கி சுடும் வீரர் அஸ்கர் அலி என்பவரின் தந்தை சபாத் அலி மத்திய மந்திரி மேனகா காந்தி மீது வழக்கு தொடரப்போவதாக தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட புலி தேடுதல் வேட்டைக்காக தனது மகன் மற்றும் 4 பேரை மராட்டிய அரசு நியமித்து அதற்கான கடிதம் கொடுத்தது. ஆனால் இந்த பிரச்சினையில் எங்களை பற்றி அவதூறாக பேசி வருவதால் மேனகா காந்தி மீது வழக்கு தொடர முடிவு செய்து இருப்பதாக அவர் கூறினார்.
Related Tags :
Next Story