மோட்டார் சைக்கிளில் சென்றபோது பட்டாசு வெடித்ததில் தீயில் கருகி பெண் பலி
மோட்டார் சைக்கிளில் சென்றபோது பட்டாசு வெடித்ததில் தீயில் கருகி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேச்சேரி,
தர்மபுரி மாவட்டம் மலையூர்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சுகப்பிரியா (வயது 29). கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சேலம் மாவட்டம் மேச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சுகப்பிரியா தனது மடியில் பட்டாசு பாக்கெட்டுகளை வைத்துகொண்டு பின்புறம் உட்கார்ந்திருந்தார்.
தெத்திகிரிப்பட்டி அருகே சென்றபோது சுகப்பிரியாவின் சேலை மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. இதில் நிலை தடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் முத்துசாமியும் கீழே விழுந்தார். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதனிடையே சுகப்பிரியா வைத்து இருந்த பட்டாசுகள் கீழே விழுந்து சிதறியதில், அவை திடீரென்று வெடித்தன. பட்டாசுகள் வெடித்ததால் சுகப்பிரியாவின் சேலையில் தீப்பிடித்தது. இதில் உடல் கருகி படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். உடனே அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து, அவரை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி சுகப்பிரியா பரிதாபமாக இறந்தார். மேலும் முத்துசாமி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு வெடித்ததில் தீயில் கருகி பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story