மாவட்டம் முழுவதும்: குறித்த நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்த 50 பேர் கைது - போலீசார் நடவடிக்கை


மாவட்டம் முழுவதும்: குறித்த நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்த 50 பேர் கைது - போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Nov 2018 3:15 AM IST (Updated: 8 Nov 2018 4:00 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகை அன்று குறித்த நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்த 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர், 

நாடு முழுவதும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. பலர் அதிகாலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தி பட்டாசுகள் வெடித்தனர். மேலும் வீடுகளில் பலகாரங்கள் தயார் செய்து அருகில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.

பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அடைவதை தடுக்க குறிப்பிட்ட நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் பட்டாசு வெடிக்க காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து பிற நேரத்தில் பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க மாவட்ட காவல்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து பட்டாசுகள் வெடித்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடித்த 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மாவட்டத்தில் காவல்துறையில் 8 உட்கோட்டம் உள்ளது. உட்கோட்டம் வாரியாக கைது செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-
வேலூர்- 14, காட்பாடி- 4, ராணிப்பேட்டை- 6, அரக்கோணம் - 2, குடியாத்தம் - 4, ஆம்பூர் - 6, வாணியம்பாடி - 7, திருப்பத்தூர்- 7.
கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story