புதுவை அருகே கடல் அலையில் சிக்கி பலியான காதல் ஜோடி உடல்கள் கரை ஒதுங்கின


புதுவை அருகே கடல் அலையில் சிக்கி பலியான காதல் ஜோடி உடல்கள் கரை ஒதுங்கின
x
தினத்தந்தி 8 Nov 2018 4:45 AM IST (Updated: 8 Nov 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

புதுவை அருகே குளித்தபோது கடல் அலையில் சிக்கி பலியான பெங்களூரு காதல் ஜோடியின் உடல்கள் கரை ஒதுங்கின.

வானூர்,

டெல்லி செக்கான் விகர்பாலம் பகுதியை சேர்ந்தவர் கிரிஸ் ரமேஷ் அவஸ்தி. இவரது மகன் அன்சுல் கிரிஷ் அஸ்வத் (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர் எனாத்சி வாலியா (20). பெங்களூருவில் உள்ள கல்லூரியில் பொறியியல் படித்து வந்தனர். இருவரின் பெற்றோரும் விமானப்படை அதிகாரிகள். சிறு வயது முதல் பழகி வந்ததால் இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தீபாவளி விடுமுறையை கொண்டாட கடந்த 4-ந் தேதி புதுச்சேரிக்கு அன்சுல் கிரிஷ் அஸ்வத், எனாத்சி வாலியா ஆகிய இருவரும் வந்தனர். இங்கு பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்துவிட்டு கோட்டக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

5-ந் தேதி வாடகைக்கு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சின்ன முதலியார்சாவடி கடற்கரைக்கு சென்று இருவரும் குளித்து செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது எழுந்த ராட்சத அலை அவர்களை கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதைப்பார்த்ததும் அங்கிருந்த மற்ற சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதுபற்றி கோட்டக்குப்பம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, இன்ஸ்பெக்டர்கள் திருமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள்செல்வம், அய்யப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீனவர்கள் உதவியுடன் படகுகளில் சென்று கடலில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே அவர்களின் கதி என்ன என்பது தெரியாமல் இருந்தது. இந்தநிலையில் அன்சுல் கிரிஷ் அஸ்வத், எனாத்சி வாலியா ஆகியோரது உடல்கள் புதுவை அருகே முத்தியால்பேட்டை சோலைநகர் கடற்கரையில் நேற்று முன்தினம் கரை ஒதுங்கியது. இதுபற்றி தெரியவந்ததும் கோட்டக்குப்பம் போலீசார் அங்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் காதல் ஜோடி அலையில் சிக்கி கடலில் மூழ்கி பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story