பிராந்திய அடிப்படையில் பணிநியமனம்: அமைச்சர் கமலக்கண்ணன் தன்னிச்சையாக முடிவெடுப்பதா? சிவா எம்.எல்.ஏ. கண்டனம்


பிராந்திய அடிப்படையில் பணிநியமனம்: அமைச்சர் கமலக்கண்ணன் தன்னிச்சையாக முடிவெடுப்பதா? சிவா எம்.எல்.ஏ. கண்டனம்
x
தினத்தந்தி 7 Nov 2018 11:11 PM GMT (Updated: 7 Nov 2018 11:11 PM GMT)

கல்வித்துறையில் பிராந்திய அடிப்படையில் பணி நியமனம் செய்யும் முடிவினை அமைச்சர் கமலக்கண்ணன் எடுத்துள்ளதாக சிவா எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியங்களை கொண்டுள்ளது. இங்குள்ள மக்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளை பேசினாலும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்தநிலையில் புதுவை அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பிராந்திய இடஒதுக்கீட்டின்படி நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பிராந்திய ரீதியான பிரிவினையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. காரைக்கால் மாவட்டம் பின்தங்கிய பகுதி என்ற காரணத்தை கொண்டு உயர்கல்வியில் மாணவர்களுக்கு பிராந்திய இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த பிராந்திய ஒதுக்கீட்டால் புதுவையில் அதிக மதிப்பெண் எடுத்தும் தகுதியுள்ள மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் கல்வியில் பிராந்திய ரீதியிலான ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் என்று சட்டமன்றத்தில் தி.மு.க. குரல் கொடுத்தது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும், குறிப்பாக எந்த யூனியன் பிரதேசத்திலும் பின்பற்றப்படாத நிலையில் புதுச்சேரியில் மட்டும் ஏன் பிராந்திய ஒதுக்கீடு? இது அரசியல் சட்ட விதிகளுக்கு புறம்பானது.

சட்டம் படித்தவர் இந்த மாநிலத்தின் முதல்-அமைச்சராக உள்ளார். அவர் எப்படி இதற்கு ஒப்புதல் அளித்தார்? மக்கள் நலத்திட்டங்களுக்கு அரசு மூலம் அனுப்பப்படும் கோப்புகளை எல்லாம் திருப்பி அனுப்பும் கவர்னர் எப்படி இந்த கோப்பிற்கு அனுமதி அளித்தார்? பிராந்திய இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் முன்பு கல்வியாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், நடுநிலையாளர்களை அழைத்து அதன் சாதக பாதகங்களை விவாதித்திருக்க வேண்டும்.

காரைக்காலை சேர்ந்த கல்வி அமைச்சர் தனது சொந்த விருப்பத்திற்காக தன்னிச்சையான முடிவினை எடுத்துள்ளார். இதை தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை பாதிக்கும் இந்த பிராந்திய ரீதியிலான இடஒதுக்கீடு பணிநியமனத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் படித்த இளைஞர்களை ஒன்றுதிரட்டி மாபெரும் போராட்டத்தை தி.மு.க. நடத்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் சிவா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Next Story