சம்பளம் வழங்கக்கோரி கூட்டுறவு துறை பதிவாளர் அலுவலகத்தை ரேஷன் கடை ஊழியர்கள் முற்றுகை


சம்பளம் வழங்கக்கோரி கூட்டுறவு துறை பதிவாளர் அலுவலகத்தை ரேஷன் கடை ஊழியர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 8 Nov 2018 5:00 AM IST (Updated: 8 Nov 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

சம்பளம் வழங்கக்கோரி ரேஷன்கடை ஊழியர்கள் கூட்டுறவு துறை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் முதல்-அமைச்சரை சந்தித்த அவர்களுக்கு, வேறு துறைகளில் பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்தார்.

புதுச்சேரி,

புதுவை ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 16 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து அவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கூட்டுறவு துறை பதிவாளர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போனஸ் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பளம் தொடர்பான விவரங்களுக்கு முதல்-அமைச்சர், துறை அமைச்சரை சந்தித்து பேசும்படி அறிவுறுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து ஊழியர்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேசினார்கள்.

அப்போது அவர்களிடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி, இன்னும் ஓரிரு நாளில் போனஸ் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், ரேஷன்கடை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை இருப்பதால் அவர்களுக்கு வேறு துறைகளில் பணி இருந்தால் அந்த இடங்களில் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அதை ஏற்று ரேஷன் கடை ஊழியர்கள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை தள்ளி வைத்தனர்.

Next Story