தேவதானப்பட்டி அருகே அம்பேத்கர் சிலை சேதம்; பொதுமக்கள் சாலை மறியல்
தேவதானப்பட்டி அருகே அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
தேவதானப்பட்டி,
தேனியை அடுத்த தேவ தானப்பட்டி அருகேயுள்ள குள்ளப்புரம் ஊராட்சி மருகால்பட்டியில் அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு சிலர் அம்பேத்கர் சிலையின் மூக்குப்பகுதியை சேதப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலையில் சிலை சேதமடைந்து இருப்பதை பார்த்த மருகால்பட்டி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து மருகால்பட்டியில் உள்ள எ.வாடிப்பட்டி-வைகைஅணை சாலையில் நேற்று காலை 9 மணியளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரியகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சுகுமாரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதைத்தொடர்ந்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருகை தந்து பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின் சுமார் 4 மணி நேரம் நீடித்த சாலை மறியல் மதியம் 1 மணியளவில் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து மருகால்பட்டியை சேர்ந்த கணேசன் தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதையொட்டி அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதாகவும், சாதியின் பெயரை சொல்லி திட்டியதாகவும் குள்ளபுரத்தை சேர்ந்த வையாபுரி, ராஜாமணி, காமராஜ், சக்தி, முருகன், காளியப்பன், பழனிச்சாமி, கோகுல், வைரமுத்து, தமிழ்ப்பாண்டி, ராஜாராம் மற்றும் பிச்சைராஜ் ஆகிய 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் அங்கு பதற்றத்தை தவிர்க்க போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தீபாவளியன்று குள்ளப்புரத்திற்கு மருகால்பட்டியை சேர்ந்தவர்கள் பொருட்கள் வாங்க வந்தபோது இருதரப்பினருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் இதன் தொடர்ச்சியாக அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இதனிடையே அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்தும், சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரியும் தமிழ்ப்புலிகள் கட்சியை சேர்ந்தவர்கள் மாவட்ட துணைச்செயலாளர் அலெக்ஸ் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பியபடி தேனி நேரு சிலை சிக்னல் முன்பு சாலை மறியல் செய்ய முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்ற 12 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story