பேனர்கள் வைக்க அனுமதி மறுப்பு: ஆண்டிப்பட்டியில் தங்கதமிழ்செல்வன் சாலை மறியல்


பேனர்கள் வைக்க அனுமதி மறுப்பு: ஆண்டிப்பட்டியில் தங்கதமிழ்செல்வன் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 Nov 2018 3:30 AM IST (Updated: 8 Nov 2018 11:22 PM IST)
t-max-icont-min-icon

பேனர்கள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டதால், அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் ஆண்டிப்பட்டியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஆண்டிப்பட்டி,

தமிழக அரசை கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் ஆண்டிப்பட்டியில் நாளை (சனிக்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. இதனையடுத்து உண்ணாவிரத போராட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அ.ம.மு.க நிர்வாகிகள் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அ.தி.மு.க. சார்பில் நாளை மறுநாள் ஆண்டிப்பட்டியில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக அ.தி.மு.க.வினர் பேனர்கள் வைக்க ஏற்பாடு செய்தனர். இதனால் இருதரப்பினருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் போலீசார் தலையிட்டு ஆண்டிப்பட்டி பகுதியில் ஒரு பகுதியில் அ.ம.மு.க.வினரும், மற்றொரு பகுதியில் அ.தி.மு.க. வினரும் பேனர்கள் வைத்துக்கொள்ள அறிவுறுத்தினர். இதனை இருதரப்பினரும் ஏற்கவில்லை. இதனால் பிரச்சினையில் சுமுகநிலை ஏற்பட வில்லை.

இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக ஆண்டிப்பட்டி வந்த தங்கதமிழ்செல்வன், பேனர் கள் வைக்க அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து, கட்சியினருடன் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஸ்டார் ரபீக், அ.ம.மு.க ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், ராஜசேகர் ஆகியோர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் தங்கதமிழ்செல்வனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் சாலையில் இருந்து எழ மறுத்துவிட்டனர். இதையடுத்து ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் விரைந்து வந்து, தங்கதமிழ்செல்வனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனால் சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தங்கதமிழ்செல்வனிடம், புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரச்சினை குறித்து போலீசாரிடம் அ.ம.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் வெளியில் வந்த தங்கதமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆண்டிப்பட்டி தொகுதி மக்களுக்கு எந்தவிதமான வளர்ச்சிப்பணிகளையும் மேற்கொள்ளாத தமிழக அரசை கண்டித்து, நாங்கள் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று 10-ந்தேதி(நாளை) உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம். அதே நேரம் எங்கள் உண்ணாவிரதத்தில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணிய அ.தி.மு.க.வினர் 11-ந்தேதி ஊழியர் கூட்டம் நடத்துவதாக அறிவித்து, அவர்களும் பேனர்கள் வைக் கின்றனர். போலீஸ் துறை ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. அ.தி.மு.கவினர் 12-ந்தேதிக்கு பின்னர் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம். எங்கள் உண்ணாவிரதம் முடியும் வரையில் அவர்களின் பேனர் களை அகற்றிக் கொள்ள வேண்டும். மீறினால் எங்கள் உண்ணாவிரதம் நடக் காமல் போனால் கூட கவலையில்லை. ஆண்டிப்பட்டி நகரில் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடிக்கும்.

இவ்வாறு தங்கதமிழ்செல்வன் கூறினார். 

Next Story