ஈளாடா தடுப்பணை நிரம்பியது: தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம்- அதிகாரிகள் தகவல்
ஈளாடா தடுப்பணை நிரம்பி உள்ளதால் கோத்தகிரி பகுதியில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி நகரில் உள்ள கடைவீதி, ரோஸ்காட்டேஜ் சோப்பார்க், மிஷண்காம்பவுன்ட், ராம்சந்த் சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு ஈளாடா தடுப்பணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணை 80 மீட்டர் நீளம், 60 மீட்டர் அகலம் சுமார் 2 மீட்டர் உயரம் கொண்டதாகும்.
கோத்தகிரி பேரூராட்சிக்கு செந்தமான இந்த தடுப்பணையில் சேகரமாகும் ஊற்றுநீர் அணையில் சேமிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் உள்ள நீர்உந்து நிலையத்துக்கு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த தண்ணீர் சுத்திரிகரிப்பு செய்யப்பட்டு கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வரு கிறது.
இதுமட்டுமின்றி கோத்தகிரி ரைபிள் ரேஞ்ச் பகுதியில் உள்ள கிணறுகள், புதூர் பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான தடுப்பணை, கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வறட்சி நிவாரண நிதியின் கீழ் அமைக்கப்பட்ட கிணறுகள் போன்ற நீராதாரங்களில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஈளாடா தடுப்பணை போதுமான ஆழம் இல்லாததாலும் முறையாக தூர்வாரப்படாததாலும், பக்கவட்டு சுவர்கள் மண்ணால் இருந்ததாலும் தண்ணீரை அதிக அளவு சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கோடை காலங்களில் தடுப்பணை அடிக்கடி வறண்டு வந்தது.
இதை கருத்தில் கொண்டு கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் மூலம் மலைப்பகுதி மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சம் செலவில் அணையின் பக்கவாட்டு சுவர்கள் கருங்கற்களால் கட்டி பலப்படுத்தப்பட்டது.
மேலும் 2017-ம் ஆண்டு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டநிதி ரூ.40 லட்சம் செலவில் அணை முழுவதும் தூர்வாரப் பட்டு பக்கவாட்டு சுவர்கள் கட்டும் பணி முழுவதுமாக நிறைவு செய்யப்பட்டது. இதனால் அணையின் ஆழம் சற்று அதிகரித்தது.
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் முன்பு இருந்ததை விட இரட்டிப்பு மடங்கு தண்ணீர் சேமிக்க முடிகிறது. ஈளாடா தடுப்பணையில் தற்போது சுமார் ஒரு கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த அணைக்கு இயற்கை நீர் ஊற்றுகளில் இருந்து தொடர்ந்து வரும் தண்ணீர் காரணமாக அணை முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது.
இதனால் உபரி நீர் வழிந்து வெளியேறுகிறது. அணையில் இருந்து வெளியேற்றும் உபரிநீர் அங்குள்ள சிற்றோடை வழியாக செல்கிறது. ஈளாடா மற்றும் கதவுத்தொரை பகுதியில் உள்ள விவசாயிகள் அந்த ஓடைநீரை பயன்படுத்தி தோட்டங்களில் முட்டைகோஸ், பீட்ரூட், கேரட் போன்ற மலைகாய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
ஈளாடா தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் இனிவரும் நாட்களில் கோத்தகிரி நகர பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் தட்டுப்பாடு ஏற்படாது என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story