தகராறை தட்டிக்கேட்டதால் தாக்கப்பட்ட வாலிபர், சிகிச்சை பலன் இன்றி சாவு கொலை வழக்காக மாற்றம்
தம்பியுடன் தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்டதால் தாக்கப்பட்ட வாலிபர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
அம்பத்தூர்,
சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 24). இவர், அந்த பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்றபோது, எதிரே வந்த அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரைச் சேர்ந்த பாலச்சந்தர் (27) என்பவருடன் தகராறில் ஈடுபட்டார். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
பின்னர் வீட்டுக்கு சென்ற மணிகண்டன், இதுபற்றி தனது அண்ணன் மகேஷ் (26) என்பவரிடம் கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த மகேஷ், தனது தம்பியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியது குறித்து பாலச்சந்தரிடம் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
கொலை வழக்காக மாற்றம்
உடனே பாலச்சந்தர், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து மகேசை உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதில் தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதுபற்றி கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் போலீசார், சம்பவம் தொடர்பாக பாலச்சந்தர், அவருடைய நண்பர்களான சசி (22), சதீஷ் (23), தினேஷ் (22) ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story