தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை கயத்தாறு அருகே 2 வீடுகள் இடிந்தன


தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை கயத்தாறு அருகே 2 வீடுகள் இடிந்தன
x
தினத்தந்தி 9 Nov 2018 3:15 AM IST (Updated: 9 Nov 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. கயத்தாறு அருகே 2 வீடுகள் இடிந்தன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. கயத்தாறு அருகே 2 வீடுகள் இடிந்தன.

பலத்த மழை

வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பல இடங்களில் மிதமான மழை பெய்தது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தூத்துக்குடி காலை 11 மணி முதல் மிதமான மழை பெய்தது. மதியத்துக்கு மேல் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தூத்துக்குடியில் சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கின. இதில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மழை காரணமாக மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

சாயர்புரம் அருகே உள்ள குலையன்கரிசல் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பெட்டை குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. விரைவில் குளம் நிரம்பும் சூழல் உருவாகி உள்ளது. ஆகையால் குலையன்கரிசல், அத்திமரப்பட்டி, கோரம்பள்ளம், வீரநாயக்கன்தட்டு மற்றும் சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

2 வீடுகள் இடிந்தன

கயத்தாறு, தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, ஏரல், சாத்தான்குளம், தட்டார்மடம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. திருச்செந்தூர், ஆறுமுகநேரி, உடன்குடி, குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் மிதமான மழை பெய்தது. நேற்று பெரும்பாலான இடங்களில் பகல் முழுவதும் மேகமூட்டமாகவும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. எட்டயபுரத்தில் காலையில் மிதமான மழை சிறிதுநேரம் பெய்தது.

பலத்த மழையின் காரணமாக நேற்று முன்தினம் மாலையில் கயத்தாறு அருகே தலையால்நடந்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் என்பவரது ஓட்டு வீட்டின் மேற்கூரை முழுவதும் பெயர்ந்து விழுந்தது. இதேபோன்று அப்பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவரது ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அந்த வீடுகளில் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மழையால் சேதம் அடைந்த வீடுகளை வருவாய் துறையினர் பார்வையிட்டனர்.

மழையின் காரணமாக, கயத்தாறு சாய்படைதாங்கி குளம் இந்த ஆண்டு 2-வது முறையாக நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கயத்தாறில் இருந்து தலையால்நடந்தான்குளம் செல்லும் ஓடையை வழிமறித்து, காற்றாலை நிறுவனங்கள் பாதை அமைத்ததால், ஓடையில் தண்ணீர் செல்லாமல், அருகில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது.

மழை விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 68.4 மில்லி மீட்டர் மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 50 மில்லிமீட்டர் மழையும் பெய்தது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

சாத்தான்குளம்- 68.4, ஸ்ரீவைகுண்டம்-50, தூத்துக்குடி-0.8, திருச்செந்தூர்- 3, காயல்பட்டினம்- 2.2, கயத்தாறு-20, குலசேகரன்பட்டினம்-17.

Next Story