கரூர் அருகே 24 மணி நேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்ட மாணவி


கரூர் அருகே 24 மணி நேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்ட மாணவி
x
தினத்தந்தி 8 Nov 2018 11:00 PM GMT (Updated: 2018-11-09T01:06:28+05:30)

புவி வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு, உலகம் முழுவதும் விமானம் மூலம் விதை பந்துகளை தூவ வலியுறுத்தி 24 மணி நேர தொடர் தியானத்தில் பள்ளி மாணவி ஒருவர் ஈடுபட்டார்.

கரூர்,

கரூர் அருகேயுள்ள ராமேஸ்வரப்பட்டியை சேர்ந்த ரவீந்திரன்-சங்கீதா தம்பதியரின் மகள் ரக்‌ஷனா(வயது 11). இவர், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மரக்கன்றுகளை வளர்த்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி சுற்றுப்புறசூழலை மேம்படுத்த வேண்டும் என்கிற குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறார். புவி வெப்பமயமாவதை தடுக்க அதிகளவு மரக்கன்றுகளை நட வேண்டும். இதற்காக விதை பந்துகளை விமானம் மூலம் உலகம் முழுவதும் தூவ வேண்டும் என்பதை வலியுறுத்தி, 24 மணி நேர தொடர் தியானம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி, மாணவி ரக்‌ஷனா தியானம் இருப்பதற்கு வசதியாக கரூர் வெண்ணெய்மலையில் தனிமேடை அமைக்கப்பட்டிருந்தது. அவரை சுற்றிலும் ஆலமரம், புங்க மரம், வேங்கை, வேம்பு உள்ளிட்ட விதை பந்துகள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை 11 மணிக்கு தியானத்தை தொடங்கிய ரக்‌ஷனா, தொடர்ச்சியாக 24 மணி நேரம் தியானத்தில் ஈடுபடுகிறார். அதாவது இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தியானத்தை நிறைவு செய்கிறார். அவர் நேற்று இரவு தூங்காமல் இந்த தியானத்தில் ஈடுபட்டார். அவ்வப்போது உணவு, தண்ணீர் மட்டும் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு தியான நிகழ்ச்சியில் கரூர், வெண்ணெய்மலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மாணவியின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்ததோடு, சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க தாங்களும் மரக்கன்றுகள் நடுவோம் என உறுதி ஏற்றனர்.

முன்னதாக மாணவி ரக்‌ஷனா கூறியதாவது:-

சாலைகள் விரிவாக்கம், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட காரணங்களால் மரங்கள் வெட்டப்படுவதன் விளைவாக தற்போது புவி வெப்பமயமாகி உலகை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்வதால் பல தீவுகள் அழியக்கூடும். தண்ணீர் பஞ்சம் உள்ளிட்டவை ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே 1½ ஆண்டுகளில் இந்தியாவில் 135 கோடி மரங்களையும், உலகில் 800 கோடி மரங்களையும் உருவாக்குவதற்காக உலகம் முழுவதும் 2,400 கோடி விதை பந்துகளை விமானம் மூலம் தூவ நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பறவைகளின் எச்சமான பழத்தின் கொட்டைகள் மூலம் இயற்கை வளர வாய்ப்புள்ளதால், உலகம் முழுவதும் பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தொடர் தியானத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

எனது வாழ்நாளில் 10 லட்சம் மரக்கன்றுகளை வளர்த்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி, சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்த வேண்டும் என்கிற குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறேன். இதுவரை 80 ஆயிரம் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கோரிக்கைகளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அட்டானியா கட்டர்ஸ் ஆகியோர் நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் மாணவி ரக்‌ஷனா வேண்டுகோள் விடுத்தார்.

புவி வெப்பமயமாவதை தடுக்க உலகம் முழுவதும் விமானங்களில் விதை பந்துகளை தூவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவி ரக்‌ஷனா, பிரதமர் நரேந்திரமோடி, ஐ.நா.சபை பொதுச் செயலாளர் ஆகியோருக்கு நேற்று காலை தனித்தனியாக கடிதமும் அனுப்பினார். பொதுநல நோக்கோடு விழிப்புணர்வு தியானத்தை மேற்கொண்ட மாணவிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. 

Next Story