விழுப்புரத்தில்: பெண்ணிடம் 11½ பவுன் நகை பறிப்பு - 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரத்தில் பெண்ணிடம் நூதன முறையில் 11½ பவுன் நகையை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலை முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியன் மனைவி பூமாதேவி (வயது 50). இவர் நேற்று மதியம் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக தனது வீட்டின் அருகில் இருந்து ஷேர் ஆட்டோவில் புறப்பட்டு விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் வந்திறங்கினார்.
பின்னர் அங்கிருந்து எம்.ஜி.சாலையில் உள்ள மார்க்கெட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள், பூமாதேவியிடம் சென்று எதற்காக இவ்வளவு நகையை போட்டுக்கொண்டு வருகிறீர்கள், பாதுகாப்பு கிடையாது என்றும் உடனே உங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகையை கழற்றி பாதுகாப்பாக வைத்துக்கொண்டு செல்லுங்கள் என்றும் கூறினர்.
இதை நம்பிய பூமாதேவி, தனது கழுத்தில் அணிந்திருந்த 11½ பவுன் சங்கிலியை கழற்றி தான் வைத்திருந்த ஒரு பையில் போட்டுக்கொண்டு மார்க்கெட்டுக்கு நடந்து சென்றார். அந்த சமயத்தில் அந்த வாலிபர்கள் இருவரும் அந்த பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2¼ லட்சமாகும்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண்ணிடம் நூதன முறையில் நகையை பறித்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story