விராலிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


விராலிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 8 Nov 2018 10:30 PM GMT (Updated: 8 Nov 2018 7:41 PM GMT)

விராலிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இத்தலத்தில் முருகன் அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்திகளை வழங்கி திருப்புகழ் பாட செய்துள்ளார். மேலும் இந்த கோவில் நாரதர் பாவ விமோசனம் பெற்ற தலமாகவும் விளங்கி வருகிறது.

இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நேற்று காலை 9.30 மணிக்கு கொடி ஏற்றப்பட்டு, கணபதி ஹோமம் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

இதையடுத்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இருவேளைகளிலும் சிம்மம், பூதம், மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முருகன் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், அன்று மாலை 6 மணிக்கு விராலிமலை கீழரத வீதியில் சூரசம்ஹாரமும் நடக்கிறது. தொடர்ந்து முருகன் தங்க கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையடுத்து 14-ந் தேதி மலைமேல் உள்ள முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், சிவாச்சாரியார்கள், மண்டகப்படிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக சூரசம்ஹாரம் அன்று புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Next Story