முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது திரளான பக்தர்கள் தரிசனம்


முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 9 Nov 2018 3:15 AM IST (Updated: 9 Nov 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது.

கந்தசஷ்டி விழா

முருகன் கோவில்களில் சூரனை வதம் செய்து, தெய்வானையை திருமணம் செய்யும் வைபவம் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நெல்லை பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு யாகத்துடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தையொட்டி உள்ள பாளையஞ் சாலைக்குமார சுவாமி கோவிலில் நேற்று காலை சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. இங்கு தினமும் சிறப்பு பூஜை மற்றும் கந்தசஷ்டி புராண சொற்பொழிவு நடைபெறுகிறது. வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலையில் சந்திப்பு ரெயில் நிலைய ரோடு, சிந்துபூந்துறை, மேகலிங்கபுரம் ஆகிய இடங்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. இங்கும் வருகிற 13-ந் தேதி தாமிரபரணி ஆற்றங்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து புனித நீராடலும் நடைபெறுகிறது.

நெல்லையப்பர் கோவில்

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் வருகிற 13-ந் தேதி கந்தசஷ்டி திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 4 மணிக்கு சுப்பிரமணியர் கோவிலில் இருந்து வடக்கு வாசல் வழியாக வெளியே வருகிறார். இதேபோல் சண்முகர் சுவாமியும் சன்னதி வழியாக கோவிலுக்கு வெளியே வருகிறார். பின்னர் 2 சுவாமிகளும் இணைந்து கீழரதவீதி, தெற்கு ரதவீதி வழியாக செல்கின்றனர். நெல்லை டவுன் போலீஸ் நிலையம் அருகில் முதல் சூரசம்ஹாரமும், கூலக்கடை பஜார் அருகில் 2-வது சூரசம்ஹாரமும், லாலா சத்திரம் முக்கில் 3-வது சூரசம்ஹாரமும், வடக்கு ரதவீதியில் 4-வது சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது.

மறுநாள் 14-ந் தேதி இரவு 8 மணிக்கு ஆறுமுகநயினார் சன்னதியில் வைத்து தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஆறுமுகநயினார் சன்னதியில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. நேற்று நடந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இலஞ்சி கோவில்

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே இலஞ்சியில் குமாரர் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி முருகன், இலஞ்சி வக்கீல் சுப்பிரமணியன், அ.தி.மு.க. செயலாளர் மயில்வேலன், திருவிளக்கு பூஜை கமிட்டி ஒருங்கிணைப்பாளர் அன்னையா பாண்டியன், நம்பி கணேசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சூரசம்ஹாரம்

திருவிழா 9 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் தினமும் காலை 11 மணிக்கு மேல் அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு தீபாராதனை மற்றும் சுவாமி வீதி உலா வருதல் நடக்கிறது. 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.20 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 14-ந் தேதி மதியம் 12 மணிக்கு மூலவர் முழுக்காப்பு மற்றும் தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு தெய்வானை திருமணம் நடக்கிறது. 15-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு முழுக்காப்பு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. 16-ந் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் யக்ஞ நாராயணன், நிர்வாக அதிகாரி முருகன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

பாவூர்சத்திரம்

பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் உள்ள வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு கொடியேற்றம், தீபாராதனை, 10 மணிக்கு யாகசாலை ஹோமம், 12 மணிக்கு அபிஷேகம், உச்சிகால பூஜை ஆகியவை நடைபெற்றது.

தொடர்ந்து வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. அதனை முன்னிட்டு அன்று காலை 10 மணிக்கு யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், தீபாராதனை, மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம், இரவு 7 மணிக்கு மகா பூர்ணாகுதி, அபிஷேகம் ஆகியவை நடக்கிறது. 14-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு அம்மன் தபசு மண்டபம் செல்லுதல், 12 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து 8 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.

Next Story