சிங்கம்புணரியில் விபத்துக்களை ஏற்படுத்தும் சாலை ஓர வாய்க்கால்கள்


சிங்கம்புணரியில் விபத்துக்களை ஏற்படுத்தும் சாலை ஓர வாய்க்கால்கள்
x
தினத்தந்தி 9 Nov 2018 4:15 AM IST (Updated: 9 Nov 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி பகுதியில் சாலை ஓரங்களில் வாய்க்கால்கள் உயர்த்தி கட்டப்படாததால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி பகுதிகளில் உள்ள தெருக்களில் சாலைகள் மிகவும் மோசமடைந்து காணப்படுகின்றன. மேலும் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த சாலைகள் கடந்த மாதம் சரி செய்யப்பட்டது. குறிப்பாக நியூ காலனி, கிழக்காட்டு ரோடு, காசியாபிள்ளை நகர் மற்றும் உப்புச் செட்டியார் தெரு போன்ற இடங்களில் போடப்பட்ட சாலை மிக மோசமாக உள்ளன.

மேலும் சாலை ஓரங்களில் செல்லும் கழிவு நீர் வாய்க்கால்கள் சாலைக்கு இணையாக உயர்த்தி கட்டப்படாததாலும், முறையாக பராமரிக்கப்படாமலும் ஆபத்தான நிலையில் உள்ளது. ஒரு சில இடங்களில் சாலை சுமார் 2 அடி உயரத்திற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாய்க்கால் தெரியாத அளவிற்கு சாலை ஓரங்களில் பெரிய பள்ளமாக காணப்படுகிறது.

இந்தநிலையில் இந்த சாலைகளில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருவோர், சாலை ஓரத்தில் உள்ள பள்ளமான வாய்க்காலை கவனிக்காமல், அந்த பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே இந்த வாய்க்கால்களை சாலை உயரம் வரை உயர்த்தி சிமெண்ட் மூடி போடப்பட வேண்டும் என்று சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகத்திடம் கேட்ட போது, இந்த கழிவு நீர் வாய்க்கால்கள் விரைவில் சீர் செய்யப்படும் என்றார்.

Next Story