பெற்றோருடன் சுற்றுலா வந்தபோது பரிதாபம்: கொடிவேரி அணையில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் சாவு


பெற்றோருடன் சுற்றுலா வந்தபோது பரிதாபம்: கொடிவேரி அணையில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் சாவு
x
தினத்தந்தி 8 Nov 2018 10:30 PM GMT (Updated: 8 Nov 2018 8:31 PM GMT)

பெற்றோருடன் சுற்றுலா வந்தபோது, கொடிவேரி அணையில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் இறந்தான்.

பங்களாப்புதூர், 

திருப்பூரை சேர்ந்தவர் கண்ணன். எலக்ட்ரீசியன் (வயது 45). அவருடைய மனைவி மலர்விழி (35). இவர்களுடைய மகன்கள் ஆனந்த் (16), மோகன் (15). ஆனந்த் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். மோகன் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் உள்ளான்.

இந்தநிலையில் தீபாவளி விடுமுறையையொட்டி கண்ணன் நேற்று முன்தினம் மதியம் குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அனைவரும் தண்ணீரில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர். சுமார் 30 நிமிடம் குளித்தபின்னர் கண்ணன், மலர்விழி, மோகன் 3 பேரும் கரைக்கு வந்துவிட்டனர். ஆனந்தை மட்டும் காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த 3 பேரும் தண்ணீரில் இறங்கி தேடிப்பார்த்தனர். ஆனந்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பயந்துபோன கண்ணன் அந்த பகுதியில் உள்ள மீனவர்களை உதவிக்கு அழைத்தார். அவர்களும் மாலை வரை அணை தண்ணீரில் தேடிப்பார்த்தார்கள். ஆனந்த் கிடைக்கவில்லை.

அதனால் மகனுக்கு என்ன ஆனதோ? என்று கண்ணனும், மலர்விழியும் அழுதபடி கரையில் காத்திருந்தார்கள். இந்தநிலையில் இரவு 9 மணி அளவில் கண்ணனின் உடல் தண்ணீரில் மிதந்தது. அதைப்பார்த்து அவர்கள் கதறி துடித்தார்கள்.

இதுபற்றி பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆனந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

அணையில் ஆழமான பகுதிக்கு ஆனந்த் குளிக்க சென்றுள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதுபற்றி பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுற்றுலா வந்த இடத்தில் மகனை பறிகொடுத்த கண்ணன் தம்பதியை பார்த்து கொடிவேரி வந்திருந்த மற்ற சுற்றுலா பயணிகளும் கண்ணீர் வடித்தனர்.

வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொடிவேரி அணையின் நீர்த்தேக்க பகுதியில் எங்கே ஆழம்?, எங்கே பாறை? என்று தெரிவதில்லை. அதனால் இதுவரை ஏராளமான மனித உயிர்கள் பலியாகி உள்ளன.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கொடிவேரி அணையின் நீர்த்தேக்க பகுதியில் நீச்சல் பயிற்சி தெரிந்த மீட்பு படை வீரர் ஒருவரை நிரந்தரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

Next Story