நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்கம் வாங்கிய விவகாரம் ஜனார்த்தனரெட்டியின் பல்லாரி வீட்டில் போலீசார் சோதனை


நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்கம் வாங்கிய விவகாரம் ஜனார்த்தனரெட்டியின் பல்லாரி வீட்டில் போலீசார் சோதனை
x
தினத்தந்தி 8 Nov 2018 11:15 PM GMT (Updated: 8 Nov 2018 9:25 PM GMT)

நிதி நிறுவன அதிபரிடம் 57 கிேலா தங்க கட்டிகள் வாங்கிய விவகாரத்தில் ஜனார்த்தனரெட்டியின் பல்லாரி வீட்டில் போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள்.

பெங்களூரு, 

நிதி நிறுவன அதிபரிடம் 57 கிேலா தங்க கட்டிகள் வாங்கிய விவகாரத்தில் ஜனார்த்தனரெட்டியின் பல்லாரி வீட்டில் போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள். மேலும் தலைமறைவான ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

ஜனார்த்தனரெட்டி தலைமறைவு

பெங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்து ரூ.600 கோடி வரை மோசடி செய்தவர் சையத் அகமது பரீத். இவர், மீது கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவாகி உள்ளது. மேலும் இந்த மோசடி தொடர்பான வழக்கை தற்போது பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்ற னர். இதுதவிர பரீத் மீது அமலாக்கத்துறையில் வழக்குப்பதிவாகி உள்ளது. அந்த வழக்கை அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் பேசி சுமூகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபர் பரீத்்திடம் ரூ.20 கோடி பேரம் பேசிய பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகள் பெற்றது குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகி விட்டார்.

இந்த வழக்கில் ஜனார்த்தனரெட்டியின் உதவியாளர் அலிகானுக்கு பெங்களூரு கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கி இருந்தாலும், அவர் தலைமறைவாக உள்ளார். ஜனார்த்தனரெட்டியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர், ஐதராபாத்தில் தலைமறைவாக இருக்கலாம் என்பதால், அங்கு முகாமிட்டு ஒரு தனிப்படை போலீசார் தேடிவருகிறார்கள். அதே நேரத்தில் நேற்று முன்தினம் பெங்களூரு சாளுக்கியா சர்க்கிளில் உள்ள ஜனார்த்தனரெட்டியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச்சென்றதாக தெரிகிறது. ஆனால் 57 கிலோ தங்க கட்டிகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.

பல்லாரி வீட்டில் சோதனை

இந்த நிலையில், தலைமறைவாக உள்ள ஜனார்த்தனரெட்டியை பிடிக்க நேற்று குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். அதே நேரத்தில் நேற்று காலை 6 மணியளவில் பல்லாரி மாவட்டம் சிருகுப்பா ரோட்டில் உள்ள ஜனார்த்தனரெட்டியின் வீட்டிற்கு குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி மஞ்சுநாத் சவுத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட போலீசார் சென்றனர். பின்னர் ஜனார்த்தனரெட்டியின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஜனார்த்தனரெட்டியின் மாமனார் பரமேஸ்வர் ரெட்டி, மாமியார் நாகலட்சுமியம்மா ஆகியோர் இருந்தனர். பின்னர் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் அங்குலம், அங்குலமாக போலீசார் சோதனை நடத்தினார்கள்.

தண்ணீர் தொட்டி, கழிவறை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக நிதி நிறுவன அதிபரிடம் பேரம் பேசி தங்க கட்டிகள் வாங்கிய விவகாரம் தொடர்பான ஆவணங்கள் எதுவும் உள்ளதா?, 57 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீசார் சோதனை நடத்தினார் கள். மேலும் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தார்கள். கடந்த சில நாட்களாக யார்-யார்? அந்த வீட்டிற்கு வந்து சென்றனர் உள்ளிட்ட விவரங்களையும் திரட்டினார்கள்.

ஸ்ரீராமுலு வந்தார்

இதற்கிடையில், ஜனார்த்தனரெட்டியின் வீட்டில் சோதனை நடத்தப்படுவது பற்றி தகவல் அறிந்ததும் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வும், ஜனார்த்தனரெட்டியின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீராமுலு அங்கு விரைந்து வந்தார். பின்னர் அவர், சோதனை குறித்து குற்றப்பிரிவு போலீசாரிடம் கேட்டறிந்தார். அதே நேரத்தில் ஜனார்த்தனரெட்டி குறித்து குற்றப்பிரிவு போலீசார் கேட்ட சில கேள்விகளுக்கு ஸ்ரீராமுலு பதிலளித்தார். இதுபோல, ஆந்திராவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான ராமசந்திர ரெட்டியும் ஜனார்த்தனரெட்டியின் வீட்டிற்கு வந்தார். இந்த சோதனை நேற்று காலை 6 மணியில் இருந்து மதியம் 3 மணிவரை இடைவிடாமல் 9 மணி நேரம் நடைபெற்றது. சோதனை முடியும் வரை ஸ்ரீராமுலு, ராமசந்திர ரெட்டி ஆகியோர் ஜனார்த்தனரெட்டியின் வீட்டிலேயே இருந்தார்கள்.

சோதனையின் போது போலீசாருக்கு சில ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக ஜனார்த்தனரெட்டியின் வீட்டில் போலீசார் சோதனை செய்யும் போது, அவரது மாமியார் நாகலட்சுமியம்மாவிடம் சில கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு அவர் சரியாக பதில் சொல்லாமல் போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் வீட்டில் சில பகுதிகளுக்கு சென்று போலீசார் சோதனை செய்ய முயன்றதையும் நாகலட்சுமியம்மா தடுத்ததாக தெரிகிறது. பின்னர் ஸ்ரீராமுலு தலையிட்டு போலீசார் சோதனை நடத்த ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

கைது செய்ய போலீஸ் தீவிரம்

சிருகுப்பா வீட்டில் போலீசார் சோதனையை முடித்துவிட்டு ஓபளாபுரத்தில் உள்ள ஜனார்த்தனரெட்டிக்கு சொந்தமான நிறுவனத்திற்கு சென்றனர். அப்போது ஜனார்த்தன ரெட்டியின் மாமனார் பரமேஸ்வர் ரெட்டியையும் போலீசார் அழைத்து சென்றார்கள். அந்த நிறுவனத்தில் நேற்று மாலை வரை போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு போலீசாருக்கு எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, பரமேஸ்வர் ரெட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி விட்டு, அவரை அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், தலைமறைவாக உள்ள ஜனார்த்தனரெட்டியை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர். பெங்களூரு, பல்லாரி, சி்த்ரதுர்கா, ஐதராபாத், ஆந்திரா மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜனார்த்தனரெட்டி இருக்கும் இடம் பற்றி முக்கிய துப்பு கிடைத்திருப்பதாகவும், இந்த வழக்கில் சில சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், அதனால் கூடிய விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story