திருவண்ணாமலை மாவட்டத்தில் சர்கார் பட பேனர்கள் கிழிப்பு - சினிமா காட்சிகள் ரத்து


திருவண்ணாமலை மாவட்டத்தில் சர்கார் பட பேனர்கள் கிழிப்பு - சினிமா காட்சிகள் ரத்து
x
தினத்தந்தி 9 Nov 2018 4:45 AM IST (Updated: 9 Nov 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் சர்கார் பட பேனர்கள் கிழிக்கப்பட்டதுடன், சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

வேட்டவலம்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் சர்கார் பட பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வந்தவாசி, ஆரணியில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

வேட்டவலத்தில் நடிகர் விஜய் நடித்த சர்கார் படம் திரையிடப்பட்டு உள்ளது. திரைப்படத்தில் இலவச பொருட்களை எரிப்பது போன்றும், கோமளவள்ளி என்ற பெயர் பயன்படுத்துவதை எதிர்த்தும் பல்வேறு போராட்டங்கள் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வேட்டவலம் அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வமணி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் அரண்மனைத் தெருவில் உள்ள சினிமா தியேட்டர் முன் கட்டப்பட்டிருந்த பேனர்களை கிழித்தனர். மேலும் சினிமா தயாரிப்பாளர், கதை ஆசிரியர், நடிகர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் மனோன்மணி, சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி, சிறப்பு தனிப்பிரிவு போலீஸ் கோட்டீஸ்வரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல் திருவண்ணாமலை மாடவீதியில் உள்ள தியேட்டர் முன்பு சர்கார் படத்திற்காக வைக்கப்பட்டு இருந்த பேனர்களையும் அ.தி.மு.க.வினர் கிழித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வந்தவாசியில் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள 2 தியேட்டர்கள் முன்பு நேற்று மாலை அ.தி.மு.க. வந்தவாசி ஒன்றிய செயலாளர்கள் அர்ச்சுனன், எம்.கே.ஏ.லோகேஷ்வரன், நகர செயலாளர் எம்.பாஷா, நகர பேரவை செயலாளர் வி.மேகநாதன், எஸ்.எஸ்.குமார், மாவட்ட பேரவை துணை தலைவர் எஸ்.தர்மதுரை, வெண்குன்றம் முன்னாள் தலைவர் முனுசாமி, நகர துணை செயலாளர் கிறிஸ்டி, இளவழகன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து 2 தியேட்டர்களிலும் மாலை நேர முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஆரணி பகுதியில் அ.தி.மு.க.வினர் பாரிபாபு, அசோக்குமார், கஜேந்திரன், வக்கீல் சங்கர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் 4 தியேட்டர்களுக்கு சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது காஜிவாடை பகுதியில் உள்ள தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த சர்கார் பட பேனரை அ.தி.மு.க.வினர் கிழித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையறிந்த விஜய் ரசிகர்கள் தியேட்டர் முன்பு மறியல் செய்ய முயன்றனர். அவர்களை ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் மற்றும் போலீசார் சமாதானம் செய்தனர். இதையடுத்து அ வர்கள் கலைந்து சென்றனர்.

பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தியேட்டரில் படம் திரையிடப்பட்டது. மற்ற 3 தியேட்டர்களில் படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

அ.தி.மு.க. சார்பில் வக்கீல் சங்கர் ஆரணி நகரில் அனுமதியின்றி வைத்துள்ள சர்கார் பட பேனர்கள் உடனே அகற்ற வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளார்.

இதேபோல் விஜய் ரசிகர்கள், பேனர்கள் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர்.

Next Story