சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு விதித்தபோதும் தீபாவளி பண்டிகையால் பெங்களூருவில் காற்று மாசு அதிகரிப்பு
சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு விதித்தபோதும், தீபாவளி பண்டிகையால் பெங்களூருவில் காற்று மாசு அதிகரித்தது.
பெங்களூரு,
சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு விதித்தபோதும், தீபாவளி பண்டிகையால் பெங்களூருவில் காற்று மாசு அதிகரித்தது.
சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடுகள்
கர்நாடகத்தில் கடந்த 6-ந் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. பெங்களூருவில் வாழும் மக்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால், நகரில் வாகன நெரிசல் குறைந்துவிட்டது. அதே நேரத்தில் பட்டாசு வெடிக்க சுப்ரீம் ேகார்ட்டு கட்டுப்பாடுகள் விதித்த போதும், தீபாவளியையொட்டி குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், நகரில் காற்று மாசுபாடு கணிசமான அளவுக்கு அதிகரித்தது.
அதாவது சிட்டி ரெயில் நிலையம் பகுதியில் 134 மைக்ரோ கிராம் அளவுக்கு காற்று மாசுபாடு அடைந்திருந்தது. ஹெப்பால் பகுதியில் 77, ஜெயநகரில் 98, நிமான்ஸ் மருத்துவமனை சில்க் போர்டு பகுதியில் 60, பசவேஸ்வராநகரில் 67 மைக்ரோ கிராம் என்ற அளவில் காற்றுமாசுபாடு இருந்தது.
காற்று மாசுபாடு அதிகரிப்பு
அந்த பகுதிகளில் தீபாவளி பண்டிகைதொடங்குவதற்கு முன்பு அதாவது கடந்த 4-ந் தேதி மற்றும் 5-ந் தேதி ஹெப்பாலில் 57 மைக்ரோ கிராம், ஜெயநகரில் 57, நிமான்ஸ் மருத்துவமனை பகுதியில் 49, சில்க்போர்டுபகுதியில் 44, சிட்டி ரெயில் நிலையத்தில் 117, பசவவேஸ்வராநகரில் 35 மைக்ரோ கிராம் என்ற அளவில் காற்று மாசுபாடு இருந்தது.
இந்த அளவீடுகளை பார்க்கையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட 3 நாட்களில் காற்று மாசுபாடு கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்தது. இரவு 9 மணியளவில் காற்று மாசுபாடு அதிகளவில் இருந்தது. அந்த நேரத்தில் ஜெயநகரில் 357, சில்க்போர்டு பகுதியில் 312, ஹெப்பால் 302 மைக்ரோ கிராம் என்ற அளவில் இருந்தது.
விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்
இதுகுறித்து கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் லட்சுமண் கூறுகையில், “தீபாவளி பண்டிகையையொட்டி நகரில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதனால் வாகன நெரிசல் குறைந்துள்ளது. பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அடைவதாகவும், அதனால் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் கூறி நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். ஆயினும் காற்று மாசு சற்று அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு காற்று மாசு அடைவது குறைந்துள்ளது” என்றார்.
Related Tags :
Next Story